சென்னை: புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீர்செய்திடத் தற்காலிக நிவாரணத் தொகையாக ரூபாய் 7,033 கோடியும், நிரந்தர நிவாரணத் தொகையாக ரூபாய் 12,659 கோடியும் வழங்கிட வேண்டும் எனும் கோரிக்கை மனுவைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்தியக் குழுவிடம் இன்று வழங்கினார்.
மிக்ஜம் புயலால் தமிழகத்தில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களும் பெரிய அளவிலான பாதிப்புக்கு உள்ளாகியது. இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் வெள்ளப் பாதித்த பகுதிகளைப் பார்வையிட வந்த ஒன்றிய அரசின் பல்துறை ஆய்வுக் குழு, மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பெருநகர சென்னை மாநகராட்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, ஆய்வுக் குழுவை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனையின் போது மிக்ஜம் புயலால் ஏற்பட்ட சேதங்களுக்கு நிதி ஒதுக்கீடு கோரும் கோரிக்கை மனுவினை அரசின் ஆய்வுக் குழுவின் தலைவரிடம் முதல்வர் வழங்கினார்.
அந்த கோரிக்கை மனுவில், புயல் மழையால் சாலைகள், பாலங்கள், பள்ளிக் கட்டடங்கள், அரசு மருத்துவமனைகள் போன்ற பொதுக் கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சீர்செய்திடவும், மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ள டிரான்ஸ்பார்மர்கள், மின் கம்பங்கள், பழுதடைந்த துணை மின் நிலையங்கள் உள்ளிட்ட மின்சார உட்கட்டமைப்புகளைச் சீர் செய்திடவும், பாதிக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர்த் தொட்டிகள், தெருவிளக்குகள், கிராம சாலைகள் ஆகியவற்றைச் சீர் செய்திடவும் இழப்பீடுகள் கோரப்பட்டுள்ளது.
மேலும், மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் படகுகள், வலைகள் ஆகியவற்றிற்கு இழப்பீடுகள் வழங்கவும், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை ஈடுசெய்திடவும், சாலையோர வியாபாரிகள் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கிடவும், தற்காலிக நிவாரணத் தொகையாக ரூபாய். 7,033 கோடியும், நிரந்தர நிவாரணத் தொகையாக ரூபாய் 12,659 கோடியும் கோரப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் பேசும் போது, "வரலாறு காணாத இந்த பெருமழையின் காரணமாக ஏற்பட்ட மிகப் பெரிய சேதங்களைச் சரிசெய்து மீண்டும் உருவாக்கிடவும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அதனை மீண்டும் உருவாக்கி வழங்கிடவும் தமிழக அரசின் நிதி ஆதாரங்கள் மட்டும் போதுமானது அல்ல. மத்திய அரசின் பங்களிப்பும் இதற்குப் பெருமளவு தேவைப்படுகிறது.
எனவே, மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள குடும்பங்களுக்கு வாழ்வாதாரங்களை மீட்கத் தேவையான உதவிகளை வழங்கவும் பல்வேறு வகையான சமூக உட்கட்டமைப்புகளை மீட்டு எடுக்க செய்யவும் மத்திய அரசிற்கு நீங்கள் உரியப் பரிந்துரை செய்து, தமிழக அரசு கோரியுள்ள நிவாரணத் தொகையைப் பெற்றுத்தர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்" என கூறினார்.
இக்கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.