தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மார்ச் 31ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசுப் பணியாளர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என தலைமைச் செயலர் சண்முகம் அனைத்துத் துறை முதன்மைச் செயலர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் குறிப்பிட்டுள்ளவை பின்வருமாறு:
- சளி, காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம் ஆகிய அறிகுறிகள் இருக்கும் பணியாளர்கள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
- அனைத்து அரசுப் பணியாளர்களும் 20 விநாடிகள் கையை சுத்தமாகக் கழுவ வேண்டும்.
- பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு வருபவர்கள் கண்டிப்பாகத் தங்களைச் சோதனை செய்துகொள்ள வேண்டும்
- அவசியமான கூட்டத்தைத் தவிர மற்ற கூட்டங்களை அலுவலர்கள் தவிர்க்க வேண்டும். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும். அரசு அலுவலகத் தரைகள், லிப்ட், படிகள் ஆகியவற்றைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
- பொதுமக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் மேற்கூறிய விதிமுறைகளைக் கட்டாயம் கடைபிடித்து கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தலைமைச் செயலகத்தில் கரோனா சோதனை தீவிரம்