தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள், கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதில் மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களில் குறைபாடு இருந்தால் வரும் 17ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை தலைமை ஆசிரியர்கள் மூலமாக முறையிடலாம் என்று அரசு தேர்வுத் துறை இயக்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து மேல் நிலை மற்றும் உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "10ஆம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண் சார்ந்த குறைகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால் வரும் 17ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை தங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்காகப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் SSLC 2020 Grievence Form - என்ற தலைப்பைத் தேர்வு செய்து குறைதீர் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து தேவைக்கு ஏற்ப நகலெடுத்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும். மேலும் மாணவர்கள் எந்தெந்த பாடத்தில் தங்களுக்கு மதிப்பெண் குறைவாக உள்ளது எனப் படிவத்தை நிரப்பிக் கையொப்பமிட வேண்டும்.
பின் இதனை தலைமை ஆசிரியர் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் முடிவுகளோடு பொருந்திப்பார்த்து படிவத்தைப் பூர்த்தி செய்து, இறுதியாக, மாணவர்களின் கோரிக்கை தொடர்பான பரிந்துரைகள், குறிப்புரைகள் எழுதி படிவங்களை ஸ்கேன் செய்து அரசுத் தேர்வுகள் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.