சென்னை சேத்துப்பட்டில் ரயில்வேத் துறையை தனியார் மயமாக்கலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எஸ்ஆர்எம்யூ பொதுச்செயலாளர் கண்ணையா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய கண்ணையா, ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு 25 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் எனக்கூறி மக்களை ஏமாற்றும் சதித்திட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் இயங்கும் ஐந்து ரயில்களை தனியாருக்கு கொடுக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. அப்படி நடந்தால் தற்பொழுது கொடுக்கும் கட்டணத்தைவிட மூன்று மடங்கு கொடுக்க நேரிடும் எனக் கூறினார்.
மேலும், தாம்பரம் செல்ல தற்போது 10 ரூபாய், தனியார்மயமானால் 50 ரூபாய் கொடுக்க வேண்டும். சாமானியர்கள் ரயில்களில் செல்ல முடியாதபடி மத்திய அரசு செயல்பட உள்ளது. மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தனியார் மயமாவதை தடுக்க போராட வேண்டும். இனி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது ரயில்வே துறையில் கனவாகவே இருக்கும் என அறிவுறுத்தியுள்ளார்.