தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தேர்தல் விளம்பரம் ஒன்றை பதிவிட்டுள்ளது. இந்த பதிவில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மருமகளும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தின் மனைவியுமான, ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரத்தின் பரதநாட்டிய புகைப்படம் இடம்பெற்றுள்ளது. மேலும் இதில் 'தாமரை மலரட்டும்; தமிழகம் வளரட்டும்' எனும் வாசகம் குறிப்பிடப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எழுதி, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த 'செம்மொழியான தமிழ்மொழியே' பாடலில் ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் நடனமாடியிருந்தார். அந்த காணொலியில் இருந்த ஒரு காட்சிதான் பாஜகவின் விளம்பரத்தில் இடம்பெற்றுள்ள ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரத்தின் புகைப்படம்.
இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில், கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. மேலும் இந்த பதிவு தற்போது நீக்கப்பட்டுள்ளது. இதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் “ பாஜகவின் தேர்தல் விளம்பரத்துக்காக எனது புகைப்படத்தை பயன்படுத்தியது அபத்தம். தமிழகத்தில் தாமரை என்றும் மலராது” என பதிவிட்டுள்ளார்.