சென்னையில் இருந்து இலங்கையின் கொழும்பு நகருக்கு செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் நேற்று (ஜூன்.27) அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. இந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் நிறுத்தி சோதனையிட்டு அனுப்பி வந்தனர்.
இந்த நிலையில் இலங்கையைச் சேர்ந்த 27 வயது பெண் ஒருவர், சுற்றுலா விசாவில் சென்னைக்கு வந்து விட்டு தற்போது மீண்டும் இலங்கைக்கு செல்வதற்காக வந்திருந்தார். இவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை நிறுத்திச் சோதனையிட்டனர். அவருடைய உடைமைகளுக்குள் சவுதி ரியால் வெளிநாட்டு கரன்சி மறைத்து வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர்.
இந்திய மதிப்பிற்கு ரூபாய் 10 லட்சம் வெளிநாட்டுப் பணம் இருந்தது. இதனையடுத்து சுங்க அதிகாரிகள் அந்த இலங்கை பெண் பயணியின் விமான பயணத்தை ரத்து செய்தனர். அதோடு அவரை கைது செய்து, அவரிடம் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டுப் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த இலங்கை பெண் அங்கிருந்து சென்னை வந்தபோது தங்கம் கடத்தி வந்தாரா? இப்போது மீண்டும் இங்கிருந்து போகும்போது வெளிநாட்டு கரன்சியை எடுத்து செல்கிறாரா? என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.
சென்னை விமானநிலையத்தில் நேற்று முன்தினம் (ஜூன்.26) ஒரே நாளில் 3 இலங்கை பெண்கள் தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு இலங்கை பெண் வெளிநாட்டுப் பணம் கடத்தலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக இலங்கை பெண் பயணிகள் பலர் கடத்தல் குற்றங்களில் ஈடுபட்டு, கைது செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், வாழ்வாதாரத்துக்காக, இந்த பெண்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தலை முடியில் வைத்து தங்கம் கடத்தல் - சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல்