சென்னை: இலங்கை நாட்டில் உள்ள கொழும்பு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் முகமது ஷாம். இவர் வெளிநாடுகளுக்கு கொட்டைப்பாக்கு ஏற்றுமதி செய்து வரும் தொழிலைச் செய்து வருகிறார். இவர் கடந்த 10 ஆம் தேதி தொழில் சம்பந்தமாக இலங்கையில் இருந்து சென்னை வந்து மண்ணடிப் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கி உள்ளார்.
இந்த நிலையில் முகமது ஷாமின் மனைவி தன் கணவரை ஒரு கும்பல் கடத்தி வைத்து, கட்டி போட்டு 15 லட்ச ரூபாய் கேட்டு வீடியோ கால் செய்ததாக, இலங்கையிலிருந்து சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளித்துள்ளார்.
அந்தப்புகாரின் அடிப்படையில், சென்னை வடக்கு கடற்கரை போலீசார் தனியார் ஹோட்டல் நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டு சிசிடிவி காட்சிளை ஆய்வு செய்தனர். அந்த சிசிடிவியில் முகமது ஷாம் கடந்த 11ஆம் தேதி அறையை காலி செய்துவிட்டு வெளியே தனியாக நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது.
பின்னர், தனிப்படை போலீசார் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். அப்போது சென்னை கேகே நகரில் உள்ள லாட்ஜ் ஒன்றில் முகமது ஷாமை தனிப்படை போலீசார் மீட்டனர். மேலும், கடத்தல் கும்பலைச் சேர்ந்த தினேஷ், வேல்முருகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட இலங்கையைச் சேர்ந்த ரியாசுதீன் அக்சர், பெண் தொழிலதிபர் சித்ரா ஆகிய இருவரையும் அண்ணா நகரில் வைத்து போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், முகமது ஷாம் கடத்தல் கும்பலிடம் கடன் வாங்கச் சென்று சிக்கிக் கொண்டது தெரியவந்தது. கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்ட சித்ரா என்ற பெண் உலர் பழங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு முகமது ஷாம் இவருக்கு அறிமுகம் ஆகி இருவரும் இணைந்து ஏற்றுமதி தொழில் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் முகமது ஷாம் சித்ராக்கு கொடுக்க வேண்டிய ஐந்து லட்ச ரூபாய் நிலுவைத் தொகையை கொடுக்காமல் தலைமறைவாகி விட்டதாகவும், அதன் பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியாமல் இருந்ததாக சித்ரா விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் முகமது ஷாமுக்கு சொந்தமான கொட்டைப்பாக்கு கன்டெய்னரை தூத்துக்குடி துறைமுகத்தில் சிக்கி உள்ளது அதை மீட்பதற்காக இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் முகமது ரியாஸ் என்பவரிடம் பணம் வாங்க சென்னைக்கு வந்துள்ளார்.
அப்போது ரியாஸ் இந்த தகவலை சித்ராவுக்கு தெரிவித்துள்ளார். பின்னர் பணம் வாங்க சென்றபோது சித்ரா மற்றும் அவரது நண்பர் முகமது ரியாஸ் ஆகியோர் சேர்ந்து முகமது ஷாம்மை கடத்தி அவர் தரவேண்டிய ஐந்து லட்ச ரூபாய்க்கு வட்டி போட்டு 15 லட்ச ரூபாய் தர வேண்டும் என அவரது மனைவிக்கு வீடியோ காலில் மிரட்டியது விசாரணையில் தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு கடத்தலுக்கு உதவியாக இருந்த மேலும் மூவரை கைது செய்தனர். பின் ஏழு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளிகளை டிசம்பர் 1 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:திருவண்ணாமலை விவசாயிகள் 6 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து.. ஒருவர் மீது தொடரும் வழக்கு.. முதலமைச்சரின் விளக்கம் என்ன?