கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.
அதன்படி இன்று தளர்வில்லாமல் கடைப்பிடிக்கப்பட்ட முழு ஊரடங்கை தொடர்ந்து சென்னை அண்ணா சாலையில் வாகன தணிக்கை பணிகளை சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பார்வையிட்டார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இன்று அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வில்லா முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். சென்னையில் மட்டும் 200 இடங்களில் காவல் துறையினர் தடுப்புகளை அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊரடங்கை மீறியதாக இதுவரை 11,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், இதுவரை 1,60,000 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முகக்கவசமின்றி வெளியே வந்த 65,000 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இறைச்சி கடைகள், மார்கெட் போன்ற இடங்களில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர். பொதுமக்கள் தேவை இல்லாமல் வீட்டைவிட்டு வெளியே வருவதை முழுவதும் தவிர்க்க வேண்டும், மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
மேலும், காவல் துறையினரின் மன அழுத்தங்களை போக்கும் வகையில் யோகா, உடற்பயிற்சி போன்ற வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "சமீபகாலமாக இணையதளம் மூலம் அரசியல் ரீதியாகவும், தனிநபர் மீதும் அவதூறு பரப்பும் நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதனை நீதிமன்றங்களின் பார்வைக்கு கொண்டு சென்று, அதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: 'பிளாஸ்மா தானம் கொடுக்க வருவோருக்கு அரசு சலுகைகள் தருக!' - வலுத்துவரும் கோரிக்கை