அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி வழங்க வேண்டும் என திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அப்பாவு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, வரும் கல்வி ஆண்டில் இதனை செயல்படுத்தும் வகையில், பள்ளிக் கல்வித் துறை செயலர் பிரதீப் யாதவ் தலைமையில் தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன், தொடக்க கல்வி இயக்குநர் கருப்பசாமி உள்ளிட்டவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வரும் கல்வி ஆண்டு முதல் ஆங்கில பேச்சு பயிற்சி வழங்கவும்,
தனியார் பள்ளிக்கு நிகராக அரசுப் பள்ளி மாணவர்களும் ஆங்கிலம் பேச வேண்டும் என்ற எண்ணத்திலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக, அலுவலர் ஒருவர் கூறினார்.
மேலும், உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வழக்கு தொடர்ந்த திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருடன் ஆலோசனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறிய அவர், இதற்காக தற்காலிக ஆங்கிலப் பேச்சு பயிற்சி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார்.