சென்னை: குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்தல்களில் போட்டியிடத் தடைவிதிக்கக் கோரியும், அரசியல் கட்சிகள் தொடங்கவும், கட்சிகளில் நிர்வாகிகள் பொறுப்பு வகிக்கத் தடைக்கோரியும் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் அவற்றைக் கண்காணிப்பது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என அனைத்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கும் உத்தரவிட்டிருந்தது.
நீதித் துறை பதிவாளர் அறிக்கை
இந்த உத்தரவின் அடிப்படையில், தானாக முன்வந்து வழக்குப் பதிந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள முன்னாள், இந்நாள் எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான 56 அவதூறு வழக்குகள் தொடர்பான மனுக்களுக்கு முன்னுரிமை அளித்து, ஒரு நாளைக்கு 10 வழக்குகள் வீதம் சம்பந்தப்பட்ட நீதிபதிகள் முன் விசாரணைக்குப் பட்டியலிட்டு, அவற்றின் முன்னேற்றம் குறித்து அறிக்கைத் தாக்கல்செய்ய வேண்டும் என நீதித் துறை பதிவாளருக்கு உத்தரவிட்டது.
அதேபோல எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து விசாரணைக்கு எடுத்து, அவற்றின் முன்னேற்றம் தொடர்பாக உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு அறிக்கை அளிக்க வேண்டும் எனக் கீழமை நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர் நீதிமன்ற பதிவாளர் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர், கடந்த உத்தரவின் அடிப்படையில் 7.12.2020 முதல் 23.12.2020 வரையிலான காலகட்டத்தில் நீதிபதி சதீஷ்குமார் முன்பு தினம்தோறும் 10 அவதூறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு முகாந்திரமற்ற வழக்குகள் முடித்துவைக்கப்பட்டுள்ளதாகக் கூறி அதன் விவரங்களைத் தாக்கல்செய்தார்.
தமிழ்நாடு அரசு வாதம்
தொடர்ந்து தமிழ்நாடு அரசு சார்பில் முன்னிலையான அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றங்களையே சிறப்பு நீதிமன்றங்களாகச் செயல்பட அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள போதும், ஏற்கனவே சம்பந்தப்பட்ட செஷன்ஸ் நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதால், எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கை விசாரிப்பதில் முன்னேற்றம் இல்லை எனவும், தமிழ்நாடு முழுக்க முன்னாள், இந்நாள் சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினர்கள் மீது 370-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால் சிறப்பு நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் தெரிவித்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதைப் பொறுத்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்றனர்.
நீதிபதிகள் கருத்து
எம்பி, எம்எல்ஏக்கள் மீதான நிலுவை வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க ஒரு முழுமையான செயல் திட்டத்தை வகுக்க வேண்டியுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், "அவர்கள் மீதான குற்ற வழக்குகளின் விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும்.
விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து குறிப்பிட்ட இடைவெளியில் அறிக்கைத் தாக்கல்செய்ய வேண்டும். இந்த விவகாரத்தை உயர் நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும்" என்று கூறினர். மேலும், வழக்கு விசாரணையை வரும் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: ஆர்.எஸ். பாரதி மீதான வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது' - நீதிமன்றம்