சென்னை: கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை அருகே மனநலம் பாதிக்கப்பட்டவரான பென்டிங் ஜான் என்பவரை 2014 ஜூன் 22ஆம் தேதி காவல் துறையினர் வீடு புகுந்து தாக்கி, நித்திரவிளை காவல் நிலையதிற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த பென்டிங் ஜான் பாளையம்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி ஜூன் 27ஆம் தேதி உயிரிழந்தார்.
கணவரின் மரணத்திற்கு காரணமான காவல் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தனக்கு உரிய நீதி கிடைக்க உத்தரவிட வேண்டுமென மாநில மனித உரிமை அணையத்தில் அவரது மனைவி சுவர்ணா பாய் புகார் அளித்திருந்தார். இதை விசாரித்த ஆணைய உறுப்பினரான சித்தரஞ்சன் மோகன்தாஸ், காவல் துறை என்பது பலத்தையும் அதிகாரத்தையும் முன்னிலைப்படுத்தும் நபர்களாகவே பொதுமக்களுக்கு தெரிவதாக குறிப்பிட்டார்.
மேலும், குற்றம்சாட்டப்பட்ட நபர் நிரபராதி அல்லது குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை அவர் குற்றமற்றவர் என்று கருதும் விதத்தில் நடத்தப்பட வேண்டுமென்ற மனநிலை, அனைத்து காவல் துறையினரின் மனதில் இருக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார். அத்தகைய அணுகுமுறையால் தான் காவல் துறையின் மனித உரிமை மீறல்களின் எண்ணிக்கை குறையும் என்றும் தெரிவித்துள்ளார்.
சட்டத்தைக் காப்பவர்கள் தேவையற்றவர்களாக காணப்படுவது கவலை அளிப்பதாகவும், காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டுவதில் மக்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து காவல்துறைக்கு முறையான பயிற்சி அளிக்கும்படியும் வலியுறுத்தி உள்ளார்.
மாற்றுத் திறனாளிகள் மற்றும் மனநிலை சரியில்லாதவர்களை கையாளும் வகையில் காவல்துறையினருக்குப் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும், அவர்களைக் கண்டறியும் வகையிலும், அவர்கள் பயப்படாத வகையிலும் செயல்பட காவல் துறையினருக்குப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்.
மேலும், உயிரிழந்த பென்டிங் ஜான் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டதுடன், குற்றம்சாட்டப்பட்டுள்ள காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பாஜகவினர் மீது அவதூறு வழக்குத்தொடர்ந்த கேசிஆர் மகள் கவிதா