கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பலதரப்பட்ட மக்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். அவர்களது பாதிப்புகளைப் போக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நிவாரண உதவிகள், சலுகைகளை அறிவித்து வருகின்றன. குறிப்பாக அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உதவிகள் செய்து வருகின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரையில் 90 விழுக்காடு மக்கள் அமைப்பு சாரா தொழிலையே மேற்கொள்கின்றனர். ஊரடங்கு உத்தரவால் 40 கோடி தொழிலாளர்கள் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்படுவார்கள். அன்றாடம் பிழைப்பு தேடி அன்று கிடைக்கும் பொருளை வைத்து சமைத்து வயிற்றை நிரப்பி வரும் தினசரி கூலித் தொழிலாளர்களும் மிகவும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
நாடு முழுக்க சாலையோரம் வசிக்கும் கூலித் தொழிலாளர்கள் ஒரு வேளை சாப்பாட்டிற்காக என்ன செய்வார்கள், அழுகும் பச்சைக் குழந்தையின் பசியைப் போக்கி வறுமையை தீர்ப்பார்களா, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்ததுபோல் விளக்கேற்றி கரோனாவை ஒழிப்பார்களா என பல கேள்விகள் எழுகின்றன. இவர்களில் நகர்ப்புறங்களில் வசிக்கும் கூலித் தொழிலாளர்களுக்கு அதிகப்படியான சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இவர்களின் நிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்துகொள்ள சென்றோம். அப்போது, சாலையோரங்களில் பச்சிளம் குழந்தைகள் சகிதம் சாலையில் படுத்து உறங்கும் அதிகமான தொழிலாளர்களைக் காண முடிந்தது. அப்போது சிலரிடம் உணவுக்கு என்ன செய்கிறீர்கள் என்று கேட்டோம்.
அங்கிருந்த நாகம்மா என்பவர் கூறுகையில், "ஒவ்வொரு நாளும் கிடைக்கும் கூலியை வைத்தே, பானைகளில் சோறு வேகும் நிலை இருந்துவந்தது. ஊரடங்கினால் எங்களுக்கு வேலை இல்லாததால், இப்போது அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது. கடந்த இரண்டு நாள்களாக போதிய உணவின்றி குழந்தைகளை வைத்துக்கொண்டு இருந்ததை இப்பகுதியில் அடிக்கடி ரோந்து செல்லும் காவல் துறையினர் பார்த்தனர். இதையடுத்து எங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகள் வாங்கிக் கொடுத்ததால் இன்று சமையல் செய்து கொண்டிருக்கிறோம். வறுமையில் வாடி, ஒரு வேளை சோற்றுக்கே அல்லல்படும் எங்களையும் அரசு கண்டுகொள்ள வேண்டும்” என்றனர்.
மீன்பாடி வண்டி ஓட்டி அதன் மூலம் கிடைக்கும் கூலியை வைத்து பசியாற்றும் நாகம்மாள் சொல்லியதற்கு சாட்சியாக, அங்கு சட்டை அணியாத சிறுவன் பழைய கஞ்சி குடித்து பசியாறும் காட்சிகள் நம் கண்களைக் கலங்க வைக்காமல் இல்லை. காவல் துறையினரால் இப்போதைக்கு பசியாறும் இவர்களுக்கு தொடர்ந்து உணவு கிடைக்குமா என்ற கேள்வியும் எழுகிறது. பல்வேறு தரப்பினருக்கு உதவி செய்யும் தமிழ்நாடு அரசு இவர்களையும் மனதில் வைத்து ஏதேனும் உதவிகளை செய்ய முன்வர வேண்டும் என்பதே சமூக செயற்பாட்டாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: நாகையில் மருத்துவருக்கு கரோனா தொற்று!