கரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மார்ச் 23ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இன்று மட்டும் 7 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் எண்ணிக்கை 74ஆக உயர்ந்துள்ளது.
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டட தொழிலாளர்கள், ஆட்டோ, ரிக்சா ஓட்டுநர்கள், விவசாயிகள், மீனவர்கள், தினக்கூலி வேலை செய்பவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வேலையிழந்து தவித்து வருகின்றனர். இதன் காரணமாக ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, அரிசி வாங்கும் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் பணம், அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
இந்த நிவாரணம் வழங்கும் பணி ஏப்ரல் 2ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள இருக்கும் தங்களை ஊக்கப்படுத்துவதற்காக சலுகை வழங்கவேண்டும் என ரேஷன் கடை பணியாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்பு துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்காரியா வெளியிட்டுள்ள அரசாணையில், 'பொது விநியோகத் திட்டத்தின் கீழ் கரோனா நிவாரண உதவிகளை வழங்கும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கப்படும். தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் பணிபுரியும் 21 ஆயிரத்து 517 விற்பனையாளர்கள், 3777 பணியாளர்களுக்கு நிதி வழங்கப்படும். அதன்படி விற்பனையாளர்களுக்கு 2500, எடையாளர்களுக்கு 2000 சிறப்பு ஊதியமாக வழங்கப்படும் என அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 'தொழிலாளர்கள், மாணவர்களின் வீடு வாடகைக்கு நோ' - தமிழ்நாடு அரசு!