கோட்டூர்புரத்தில் சுற்றுச்சூழல் மேம்பாட்டை வலியுறுத்தி மாணவ, மாணவியர் நடத்திய விழிப்புணர்வுப் பேரணியை வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “மாணவ, மாணவியருக்கு சுற்றுச்சூழல், காற்று மாசு ஆகிய விழிப்புணர்வுகளைக் கொண்டு பல்வேறு வகையான போட்டிகள், பேரணிகள், சுற்றுச்சூழல் பயிற்றுக் கல்வி நடத்தப்பட உள்ளன.
காற்று மாசு கட்டுப்பாடு, வெப்பத்தின் காரணமாக வனவிலங்குகள் காட்டைவிட்டு வெளியேறும் அபாயம், வனவிலங்கு பாதுகாப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு சட்டம் பிறப்பித்திருக்கிறார்.
அதில் வனவிலங்கு நீர் பற்றாக்குறையால் அவர்களுக்கான உணவு எங்கே கிடைக்கிறதோ அங்கே அவர்களே பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். போதிய அளவு நீர் தொட்டிகள் அமைக்கப்படும். அலுவலர்கள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு எங்கெங்கு குடிநீர் தொட்டி அமைக்கப்படும் என்பது தொடர்பாக உரிய ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்வார்கள்” என்று தெரிவித்தார்.