சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு பங்களாவில் நடந்த காவலாளி கொலை, அதில் தொடர்புடையவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களின் மரணம் ஆகியவை குறித்து நாரதா நியூஸ் என்ற ஆன்லைன் செய்தி நிறுவனம், ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது.
இதையடுத்து, அந்த செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் மாத்யூ சாமுவேல் உள்பட பலர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அதில், இந்திய தண்டனைச் சட்டம் 153 (ஏ) (மதம், மொழி, இனம் ஆகியவற்றின் அடிப்படையில் இருபிரிவினரிடைய பகையை, மோதலை ஏற்படுத்துதல், 505 (1), (2) (ஆவணங்களை வெளியிட்டு அரசுக்கு எதிராக பொதுமக்களை கலவரத்தில் ஈடுபடச் செய்தல்) 120 (பி) (கூட்டுச்சதி) ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், தற்போதைய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கில், கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனக்கு தொடர்பு இருப்பதாக செய்தி வெளியிட்டது தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளது என குறிப்பிட்டு இருந்தார்.
மேலும், அவதூறாக செய்தி வெளியிட்ட செய்தி நிறுவனம் தனக்கு இழப்பீடாக 1 கோடியே 10 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும் என 2019ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கில், பாதுகாப்பு காரணங்களுக்காக உயர் நீதிமன்றம் வர முடியாததால், வழக்கு தொடர்பாக தன்னிடம் உள்ள ஆவணங்களை சேகரித்து நீதிமன்றத்துக்கு உதவ வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க உத்தரவிட வேண்டும் என இடையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கோடநாடு கொலை கொள்ளை தொடர்பான வழக்கில் தொடர்ந்து ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதனால், பாதுகாப்பு காரணங்களுக்காக நீதிமன்றம் வர முடியாது என்ற எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று, அவரிடம் உள்ள ஆவணங்களை சேகரித்து, நீதிமன்றத்துக்கு உதவும் வகையில் வழக்கறிஞர் ஆணையராக கார்த்திகைபாலன் என்பவரை நியமித்து உத்தரவிட்டார். மேலும், எடப்பாடி பழனிசாமியின் சென்னை இல்லத்தில் அவரிடமுள்ள ஆவணங்களை சேகரித்து சரிபார்த்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க: தீபாவளியை முன்னிட்டு முன்கூட்டியே கிடைக்கும் மகளிர் உரிமைத் தொகை.. எப்போது தெரியுமா?