கரோனா தொற்றுப் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் பல்வேறு பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கித் துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. வங்கிகள் அத்தியாவசிய சேவை என்பதால் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், வங்கிப் பணியாளர்கள் உள்ளிட்ட எந்த அத்தியாவசிய பணியாளர்களும் இருசக்கர வாகனத்தில் பயணிக்க கூடாது என தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கி ஊழியர்கள் பணிக்கு செல்ல முடியாமல் இன்று சிரமத்திற்கு ஆளாகினர். இ-பதிவு, பயணம் செய்ய யாரிடம் அனுமதி பெறுவது போன்றவற்றில் வங்கி ஊழியர்கள் மத்தியில் குழப்பம் நிலவியது. இதனைத்தொடர்ந்து மாநில வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு, வருவாய் துறை செயலாளரை சந்தித்து இந்தப் பிரச்னை குறித்துப் பேசப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வங்கி ஊழியர்கள், ஏடிஎம் பழுது நீக்கும் சேவையில் ஈடுபடுபவர்கள், ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்புவது உள்ளிட்ட சேவைகளில் ஈடுபடுபவர்கள், வங்கியில் உணவு, தேநீர் வழங்குபவர்கள் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் சென்று வர சிறப்பு அடையாள அட்டைப் படிவம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனைப் பின்பற்றி வங்கி ஊழியர்கள் தங்கள் அலுவலகத்திற்குச் சென்று வரலாம் என மாநில வங்கியாளர் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பாலியல் குற்றச்சாட்டில் சிக்கும் மற்றொரு சென்னை ஆசிரியர்!