சென்னை: ஆலந்தூரில் மத்திய தொழில் பாதுகாப்புப்படை (CISF-Central Industrial Security Force) வீரர்களின் வளாகம் உள்ளது. அங்கு உதவி சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் குல்தீப்சிங் (53). இவரோடு தங்கியிருந்தவர், கான்ஸ்டபிளாக பணிபுரியும், காஷ்மீரைச் சேர்ந்த வினோத் குமார் (28).
இந்த நிலையில், வினோத் குமார் சொந்த ஊரில் உள்ள தனது மனைவிடம் பேசுவதற்கு குல்தீப் சிங்கின் செல்போனை அவ்வப்போது வாங்கி பயன்படுத்தி வந்ததாகவும், அந்த சமயத்தில் குல்தீப் சிங் தனது போனுக்கு வைத்துள்ள 'பேட்டர்ன் லாக்' என்று அழைக்கப்படும் கடவுச்சொல்லை (password) வினோத் குமார் அறிந்துகொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக குல்தீப் சிங் இரவு நேர பணிக்காக செல்லும் சமயங்களில் வினோத் குமார் குல்தீப் சிங்கினுடைய செல்போனையும் மற்றும் ஏடிஎம் கார்டையும் எடுத்து, வங்கி ஆப் மூலமாகவும், ஏடிஎம் கார்டு மூலமாகவும் குல்தீப் சிங்கின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை அபகரித்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த ஜூன் 8ஆம் தேதி முதல் கடந்த ஜூன் 21ஆம் தேதி வரையிலும் வினோத் குமார், குல்பீர் சிங்கின் வங்கிக் கணக்கில் இருந்து மொத்தமாக 4,39,000 ரூபாயை எடுத்துள்ளார். மேலும் அதனை தன் மனைவியின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, வினோத் குமார் தனது சொந்த ஊரான காஷ்மீருக்கு சென்றுள்ளார். தனது கணக்கில் இருந்து பெரும் தொகை எடுக்கப்பட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்த குல்தீப் சிங், வங்கியில் முறையிட்டு உள்ளார்.
அதனை அடுத்து வங்கி நிர்வாகத்தினர், குல்தீப் சிங் கூறிய தகவல்களை அடிப்படையாக வைத்து ஏடிஎம் மையத்திலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, பணத்தை அபகரித்தவர் வினோத் குமார் என்பது தெரிய வந்தது.
இதனை அடுத்து, குல்தீப் சிங் கடந்த ஜூலை 1ஆம் தேதி அன்று சென்னை மவுன்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். குல்தீப் சிங்கின் புகாரி அடிப்படையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்த போலீஸ், வினோத் குமார் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
அதன் தொடர்ச்சியாக தற்போது வங்கிக் கணக்கில் இருந்து 4.39 லட்சம் ரூபாய் திருடிவிட்டு காஷ்மீருக்கு தப்பிச்சென்ற வினோத் குமாரை கைது செய்ய தனிபடை போலிசார் காஷ்மீருக்கு விரைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தங்க பிஸ்கட்டை கடத்தியவர் கைது.. போலீசாரின் சோதனையில் சிக்கியது எப்படி?