கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவத் தொடங்கியதால் மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. அதன் காரணமாக கடந்த மார்ச் 24ஆம் தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் உள்ள உள்நாட்டு, பன்னாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் எப்போதும் பரபரப்பாக இருக்கும் சென்னை விமான நிலையம் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இரண்டு மாதங்கள் கழித்து ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. அதில் உள்நாட்டு விமான சேவையைத் தொடங்கலாம் என்றும் தெரிவித்தது. இதையடுத்து பல்வேறு கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனக் கூறி கடந்த மே 25ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டது.
இதில் சென்னையில் இருந்து அதிகப்படியான விமான சேவைகளை இயக்கப்பட்டன. ஆனால், மற்ற மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வரக்கூடிய விமானங்களின் சேவைகள் குறைந்த அளவிலேயே இருந்தது.
கரோனா வைரஸ் ஊரடங்கிற்கு முன்பு சென்னை விமான நிலையத்திலிருந்து 196 விமானங்கள் புறப்பாடு மற்றும் 196 விமானங்கள் வருகை என மொத்தம் 392 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால், கரோனா வைரஸ் காரணமாக நாட்டில் அதிகப்படியான மக்கள் விமானப் போக்குவரத்தை பயன்படுத்த அச்சப்படுகின்றனர். ஆகையால், குறைந்த அளவு விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
நாளொன்றுக்கு 35 முதல் 40 விமானங்கள் புறப்பாடு, 30 முதல் 35 விமானங்கள் வருகை என்ற அளவிற்குதான் தற்போது விமானங்கள் சென்னையில் இயங்கி வருகிறது.
முக்கிய வழித்தடங்களான கொல்கத்தா, மும்பை, டெல்லி போன்ற விமான நிலையங்களுக்குச் சென்னையிலிருந்து நாளொன்றுக்கு 4 முதல் 5 விமானங்கள் செல்கின்றன. அதேபோல் அங்கிருந்து 4 அல்லது 5 விமானங்கள் மட்டுமே சென்னை வருகின்றன. மேலும் விமான கட்டணங்களை தனியார் விமான நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. இதனால் நடுத்தர மக்கள் விமானப் போக்குவரத்தைப் பயன்படுத்த தயக்கம் காட்டி வருகின்றனர்.
சென்னையில் இருந்து டெல்லி, கொல்கத்தா, அந்தமான், மதுரை, கோவை, துாத்துக்குடி உள்ளிட்ட நகரங்களுக்கு வழக்கத்தை விட அதிக விலைக்கு விமான டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன. இதனால் பயணிகள் விமானப் பயணம் மேற்கொள்ள தயங்குவதோடு செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் ரயில் மற்றும் பேருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பலர் சொந்த ஊர் செல்ல விமானப் போக்குவரத்தை மட்டுமே நம்பியுள்ளனர். ஆனால், கட்டணங்கள் அதிகப்படியாக இருப்பதால் விமானத்தில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து விமான பயணிகள் கூறுகையில், ''இ - பாஸ் நடைமுறையால் விமான பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதுபோக விமான கட்டணமும் அதிகரித்துள்ளது. ஊரடங்கிற்கு முன்பு சென்னையிலிருந்து டெல்லி சென்றபோது விமான கட்டணம் 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது. தற்போது 11 ஆயிரம் ரூபாயாக உள்ளது. அதேபோல் ஹைதராபாத் செல்வதற்கும் ரூபாய். 2000 முதல் 2500 வரையே கட்டணம் இருந்தது. தற்போது 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் பெறுகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களுக்குச் செல்வதற்கும் விமான கட்டணம் அதிகரித்துள்ளது. எனவே, விமான கட்டணங்களை குறைக்க வேண்டும். இ பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். இதனால் நடுத்தர மக்கள் விமானத்தில் பயணிக்க முடியாமல் பாதிக்கப்படுகின்றோம்'' என்றனர்.
இதுகுறித்து தனியார் விமான சேவை அதிகாரிகளிடம் கேட்டபோது, ''விமான கட்டணமானது குறைந்த அளவே உயர்த்தப்பட்டுள்ளது. விரைவில் கட்டணங்கள் குறைக்கப்படும். தற்போது பயணிகள் விமான சேவையைப் பயன்படுத்தி வருவது அதிகரித்துள்ளது. முக்கிய வழித்தடங்களான மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, டெல்லி போன்ற மாநிலங்களுக்கு குறைந்த அளவிலேயே விமான சேவை இயங்கி வருகிறது'' என்றார்.
இதையும் படிங்க:இ-பாஸ், ஊரடங்கு ஆகியவற்றில் தளர்வு அளிக்க மருத்துவ சங்கம் கோரிக்கை!