நாடு முழுவதும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 18ஆம் தேதி 13 மாநிலங்களில் 97 தொகுதிகளுக்கு நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இத்தேர்தலை முன்னிட்டு, இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைந்தது. இந்நிலையில் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18ஆம் தேதியிலிருந்து ஐந்து தொடர் விடுமுறை என்பதால், சென்னையிலிருந்து தங்களது சொந்த ஊருக்கு வாக்களிக்கச் செல்லும் மக்களின் வசதிக்காக போக்குவரத்துக் கழகம் சார்பில் 2,150 சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் இன்று மாலை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 650 சிறப்பு பேருந்துகளும், நாளை காலை 1,500 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. இதற்கான முன்பதிவு தற்போது ஆரம்பமாகியுள்ளது என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.