சென்னை: உள்ளாட்சித் துறை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இல்லம் உள்பட 60 இடங்களில் நேற்று (ஆகஸ்ட் 10) காலை 6 மணிமுதல் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனை மாலை 7 மணியளவில் நிறைவடைந்தது.
இதனையடுத்து நேற்று இரவு சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இரண்டு மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனையின்போது முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
அதன் பின்னர், சென்னை தியாகராய நகரில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு வந்த எஸ்.பி. வேலுமணி அவருடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்தச் சந்திப்பின்போது வேலுமணி உள்பட முன்னாள் அமைச்சர்கள் ஆறு பேர் கலந்துகொண்டனர்.
இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, ஆர்.பி. உதயகுமார், தங்கமணி, சி. விஜயபாஸ்கர், காமராஜ், எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொண்டதாகத் தெரிகிறது.
இரண்டு மணி நேர ஆலோசனைக்குப் பிறகு முன்னாள் அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வத்தின் வீட்டிலிருந்து சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதிக்கு ஒரே காரில் புறப்பட்டுச் சென்றனர்.
இதையும் படிங்க: திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை - ரெய்டு குறித்து எஸ்.பி. வேலுமணி கருத்து