சென்னை: இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் இன்று (நவ. 22) சென்னை வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய கேரளப் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் 26-ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 27-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் நிலவக் கூடும்.
இதனால் நாளை (நவ.22) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, திருப்பூர், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 23ஆம் தேதி, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 24ஆம் தேதி, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும், நவம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் வானிலை நிலவரம்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக் கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியசாகவும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் 26-ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், 22 முதல் 26ஆம் தேதி வரை கடலின் மேற்பரப்பில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். சென்னையை பொருத்தவரை அக்டோபர் 1ஆம் தேதி முதல் இன்று (நவ. 22) வரை பதிவான மழையின் அளவு 39 செ.மீ. இந்த காலகட்டத்தின் இயல்பான அளவு 56 செ.மீ. ஆனால் இது இயல்பை விட 30% குறைவான மழையே சென்னையில் பாதிவாகியுள்ளது" என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: சென்னையில் தொடர் மழை.. 22க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படுவதில் தாமதம்!