கரோனா தொற்று பாதிப்பை எதிர்கொள்ள ரயில்வே துறை சார்பில், நாடு முழுவதும் உள்ள ரயில்வே மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுவருகின்றன. நாடு முழுவதும் உள்ள ரயில்வே மருத்துவமனைகளில் 86 ஆக்ஸிஜன் ஜெனரேட்டர்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது நான்கு ஆக்ஸிஜன் ஜெனரேட்டர்கள் பயன்பாட்டில் உள்ளன. ரயில்வே மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், வென்டிலேட்டர் வசதிகள் உள்ளிட்டவை அதிகரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தென்னக ரயில்வே சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில்," சென்னை பெரம்பூர் ரயில்வே தலைமை மருத்துவமனையில் இரண்டு ஆக்ஸிஜன் உற்பத்தி ஜெனரேட்டர்கள் நிறுவ திட்டமிடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பெரம்பூர் ரயில்வே தலைமை மருத்துவமனையில் கரோனா பாதிப்பிற்குச் சிகிச்சை அளிக்கும் படுக்கை வசதிகள் 280 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதில் 49 ஐசியு வசதியுடன் கூடிய படுக்கைகளும் அடங்கும்.
இங்கு கோவிட் தொற்றுக்கு முன் வெறும் 90 படுக்கைகளே இருந்தன. தற்போது ரயில்வேயின் அனைத்து கோட்ட மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் ஜெனரேட்டர்கள் பொருத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகிறது.
ரயில்வே பொது மேலாளர்கள் ஆக்ஸிஜன் தயாரிப்புக்காக ரூ.2 கோடி வரை நிதி ஒதுக்க அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : திருமணத்திற்கு இ-பதிவு செய்ய புதிய விதிமுறைகள்