சென்னை: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் 4x400 ரிலே பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரேவதி வீரமணி இந்தியா சார்பாக பங்கேற்கிறார்.
தற்போது மதுரை ரயில்வே கோட்டத்தில் வணிகப் பிரிவு கிளர்க்காக (டிக்கெட் கலெக்டராக) பணியாற்றி வரும் ரேவதி வீரமணிக்கு தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
"டோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாடயிருக்கும் ரேவதி வீரமணி பெருமையையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளார். அவர் நாட்டுக்கு வெற்றி வாகை சூடி வருவார்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
மதுரை லேடி டோக் கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரயில்வே பணியில் சேர்ந்தார். இவர் பல்வேறு தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த காலங்களில் தென்னக ரயில்வே சார்பில் ஏராளமான சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பி.டி. உஷா உள்ளிட்ட 26 விளையாட்டு வீரர்கள் தென்னக ரயில்வேயைச் சேர்ந்தவர்களே ஆவர்.
இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக்கில் தமிழச்சிகள்!