சென்னை: உலக சுற்றுச்சூழல் தினம் நாளை கொண்டடப்படவுள்ள நிலையில், இந்திய ரயில்வே தனது இயக்கத்தை பசுமையானதாக மாற்ற தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், 2030ஆம் ஆண்டுக்குள் ரயில்கள் மூலம் வெளியிடப்படும் கரியமில வாயுவை முற்றிலும் நீக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதற்கான நடவடிக்கைகளையும் தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி, ரயில் பெட்டிகளில் இயங்கும் மின் விளக்கு, மின்விசிறி ஆகியவற்றுக்கு மின் சக்தியை பெட்டிக்கு மேல் இயந்திரம் பொருத்தி வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பவர் கார் கோச் என மின் இயக்கத்துக்காக தனி பெட்டிகள் இணைக்கப்படும். இந்த புதிய நடைமுறையால் மின்சாரம் சேமிக்கப்படுகிறது.
தற்போது, நாடு முழுவதும் 1,280 ரயில்களில் இதுபோன்ற வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் ஆண்டுதோறும் 31,88,929 டன் கரியமில வாயு வெளியேற்றம் குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் பயனாக இதன்மூலம் 2,300 கோடி ரூபாய் அளவுக்கு எரிபொருள் சேமிக்கப்படுகிறது.
தென்னக ரயில்வேயில் இதுபோல 51 ஜோடி (இரு வழித்தடங்களிலும்) ரயில்களில் இப்புதிய தொழில்நுட்பம் அமல்படுத்தப்பட்டு, 100 கோடி ரூபாய் மதிப்பிலான எரிபொருள் சேமிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் டீசலால் இயக்கப்படும் ரயில்களை மின்சார ரயில்களாக மாற்றுவதன் மூலம் சூழல் மாசைக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் நிதியாண்டில் இருந்து 2021 ஆம் நிதியாண்டு வரை முறையே 264, 605, 784, 721 ரயில் மின்சார எஞ்சின்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் 905 மின்சார ரயில்கள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் டீசல் ரயில்களின் இயக்கம் மெல்ல மெல்ல குறைக்கப்படும்.
தென்னக ரயில்வே சார்பாக இந்தாண்டு 27 ஜோடி ரயில்கள் பிற ரயில்வே மண்டலங்களிலிருந்து பெற்று டீசல் எஞ்சின்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் எரிபொருள் சேமிக்கப்படுவதுடன் பல இடங்களில் டீசல் தடத்திலிருந்து மின்சார தடத்துக்கும் மறுவகையிலும் மாற்றும் நேரம் மீதமாகும். இது பயணத்தை விரைவுபடுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்திய ரயில்வே 800 புதிய மின்சார எஞ்சின்களை உற்பத்தி செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது மும்முனை மின்சாரத்தில் இயங்கும் நவீன வசதிகள் கொண்ட ரயில் எஞ்சின் என்பதால் மின்சாரத்தை சேமிப்பதோடு ரயில்களின் வேகத்தையும் அதிகரிக்கும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ரயில் மூலம் மதுபானங்கள் கடத்தல் - 42 பேர் கைது