கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பேருந்து. ரயில், விமானம் உள்ளிட்ட அனைத்து பொது போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. இதனால் சிதம்பரத்தில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளி ஒருவர் உயிர் காக்கும் மருந்து இல்லாமல் தவித்துள்ளார். இது தொடர்பாக அவரது மகன் வடிவேலு கடந்த 23ஆம் தேதி தென்னக ரயில்வே நிர்வாகத்தை தொடர்பு கொண்டார்.
இதனையடுத்து தென்னக ரயில்வே சார்பில் புற்றுநோய்க்கு பயன்படும் உயிர் காக்கும் மருந்தை சிதம்பரம் அனுப்புவதற்கான பணிகள் தொடங்கியது. சென்னையிலிருந்து சிதம்பரத்துக்கு நேரடியாக சரக்கு ரயில் சேவை இல்லாததால், முதலில் நாகர்கோவில் செல்லும் சரக்கு ரயில் மூலமாக மருந்து பொருள்கள் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
பின்னர் அங்கிருந்து சிதம்பரத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. சிதம்பரம் ரயில் நிலைய மேலாளர் மருந்துப் பெட்டியை நோயாளியின் குடும்பத்தாரிடம் வழங்கினார். ஊரடங்கு காலத்தில் அத்தியாவசியப் பொருள்களை கொண்டு செல்வதற்காக தென்னக ரயில்வே சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள SETU-SR சேவை மூலமாக இந்த உதவி செய்யப்பட்டுள்ளது. இது போன்ற அத்தியாவசியப் பணிகளுக்கு ரயில்வே நிர்வாகத்தை, 90253 42449 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.