சென்னை: வட சென்னையில் இயங்கி வரும் மணலி பெட்ரோலியம், தமிழ்நாடு பெட்ரோலியம் மற்றும் கோத்தாரி பெட்ரோலியம் நிறுவனங்கள் எண்ணெய் சுத்திகரிப்பு மூலம் அளவுக்கு அதிகமாகக் கழிவுகளைக் கடலில் கலந்ததாக பல்வேறு தரப்பில் இருந்து புகார் எழுந்தது. இதனையடுத்து, இந்த புகாரின் அடிப்படையில் வழக்கை விசாரணைக்கு எடுத்த தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம்.
மேலும், நிபுணர்கள் குழுவை அமைத்து நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்படி, ஆய்வு செய்த குழு தனது இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்தது. அதில், குறிப்பிட்ட அளவை விடக் கழிவுகள் அதிகமாகக் கடலில் கலக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் கே.ராமகிருஷ்ணன், நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அடங்கிய அமர்வு, கழிவுநீர் வெளியேற்றாமல் எண்ணெய் சுத்திகரிப்பு சாத்தியமில்லை என்ற நிறுவனத்தின் வாதத்தை ஏற்கவில்லை. இதனையடுத்து, தேசிய கடல்சார் நிறுவனமும், நீரி அமைப்பும் எண்ணெய் நிறுவனத்தின் கழிவுகள் கடலில் கலக்காமல் தடுக்க அறிவியல் பூர்வமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம்? என ஆய்வு செய்ய உத்தரவிட்டது.
மேலும், நிபுணர் குழு தொடர்ந்து தனது ஆய்வை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கடல்நீர் மாசுபாட்டுக்குக் காரணமான 3 பெட்ரோலியம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.3 கோடி அபராதம் விதித்து தெண்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியேற்றும் கழிவு நீரின் அளவு குறிப்பிட்ட அளவில் உள்ளதா? எனத் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:'இந்த ஆண்டின் இறுதிக்குள் 5G சேவை வரப்போகுது' - மத்திய தகவல் தொடர்புத் துறை தகவல்!