சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில், தென்னிந்திய மீனவர் நலச் சங்கத்தினர் இன்று(ஆகஸ்ட் 9) செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் தலைவர் பாரதி, "மீனவர்களை வஞ்சிக்கும் கடலோர மண்டல மேலாண்மைத் திட்டம் 2019-ஐ திரும்பப் பெற வேண்டும். முழுமையான கடற்கரை திட்ட மேலாண்மை வரைபடம் இல்லாமல் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இப்போது வெளியிடப்பட்ட வரைபடம் என்பது பாரம்பரிய மீனவர்களின் உரிமைகளை கருத்தில் கொள்ளாமல் இருப்பதால், அதனை திரும்ப பெற வேண்டும். தமிழகத்தில் 610 மீனவ கிராமங்களில் எந்த அளவு மீன் பிடிப்பு நடக்கிறது என்பதனை கணக்கெடுக்க வேண்டும். மீனவ கிராமங்களின் குடியிருப்புத் தேவையைக் கருத்தில் கொண்டு நீண்ட கால குடியிருப்பு திட்டங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.
ஆனால், தமிழ்நாட்டுக்கான எந்த ஒரு கடலோர மண்டல மேலாண்மை திட்ட வரைபடத்திலும், இந்தத் திட்டம் இடம்பெறவில்லை. 12 மாவட்டங்களில் இருக்கும் நீண்ட கால வாழ்வாதார குடியிருப்பு தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பும் இல்லை.
உயர்தர கடல் அரிப்பு, நடுத்தர கடல் அரிப்பு, குறைந்த கடல் அரிப்பு பகுதிகளையும் அதன் அம்சங்களையும் இந்த வரைபடத்தில் குறிப்பிட வேண்டும். வழக்குத் தொடர்ந்து, அந்த வழக்கின் தீர்ப்பில், அதன் அம்சங்களை அமைக்க வேண்டும் என தீர்ப்பு வந்தும், தீர்ப்பின் அடிப்படையில் எந்த ஒரு தகவலும் இல்லை.
தமிழக மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும். அரசு சார்பில் வெளியிடப்பட்ட முழுமையற்ற வரைபடங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். வரைபடங்களில் எந்த திட்டங்களும் சேர்க்கப்படாமல் மீனவ கிராமங்களை தவிர்த்து விட்டு வரைபடம் ஆனது அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு மீனவர் கிராமங்களின் பெயர்கள் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. சில கிராமங்களின் பெயர் தெரிவிக்கப்படவில்லை. இந்த வரைபடங்கள் சரி செய்யப்படவில்லை என்றால் 18ஆம் தேதி நடக்கவிருக்கும் கருத்து கேட்புக் கூட்டத்தில் மீனவர்கள் சார்பில் யாரும் கலந்து கொள்ளாமல் அதனை புறக்கணிப்போம்" என்று கூறினார்.
கடந்த 2019ஆம் ஆண்டு, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பை வெளியிடப்பட்டது. அதன்படி, நீடித்த கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையம் (NCSCM) என்ற நிறுவனம், தமிழகத்திற்கான கடலோர மண்டல மேலாண்மைத் திட்ட வரைவு மற்றும் நிலப்பயன்பாட்டு வரைபடங்களை தயாரித்துள்ளது.
இந்த வரைபடங்கள் குறித்து தமிழக அரசு சார்பில் ஆன்லைன் மூலம் மக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது. இந்த வரைபடங்கள் முழுமையாக இல்லை என்றும், அதில் பல்வேறு மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றும் மீனவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.