சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த மார்ச் மாதம் 30 ந் தேதி முதல் ஏப்ரல் 28 ந் தேதி வரையில் ஆன்லைன் மூலம் குருப் 4 பணியிடங்களில் அடங்கிய கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரி தண்டலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில் 7138 காலிப்பணியிடங்களை அறிவித்தது. முதல் முறையாகத் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு நிறுவனத்தில் 163 பணியிடங்கள் என 7301 பணியிடங்களை நிரப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கான எழுத்துத்தேர்வு ஜூலை 24 நடத்தப்பட்டது. அப்போது தமிழ் மாெழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத்தேர்விற்கு 150 மதிப்பெண்களுக்கும், பொது அறிவிற்கு 150 மதிப்பெண்கள் என 200 கேள்விகள் 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டன. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு 9 லட்சத்து 35 ஆயிரத்து 354 ஆண் தேர்வர்களும், 12 லட்சத்து 67 ஆயிரத்து 457 பெண் தேர்வர்களும் விண்ணப்பித்திருந்தனர். குரூப்-4 தேர்வை சுமார் 15 லட்சம் பேர் எழுதியிருந்தனர்.
விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருவதால் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் குரூப் 4 ரிசல்ட் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
டிசம்பர் மாத இறுதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியாகும் என தேர்வு எழுதியவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் தேர்வு முடிவுகள் ஜனவரி மாதத்திற்கு தள்ளி போயிருப்பது அவர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் விதமாக உள்ளது. இருப்பினும் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த 7301 காலிப்பணியிடங்களில் தற்போது மேலும் 2450 காலிப்பணியிடங்கள் அதிகரித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வு எழுதியவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு போட்டித்தேர்வு மையங்களின் தலைவரும், ரேடியன் ஐஏஎஸ் அகடாமியின் நிறுவனருமான ராஜபூபதி கூறும்போது, ”தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் ஆண்டுதோறும் பணியிடங்களை நிரப்புவதற்கு வெளியிடப்படும் அறிவிப்பில், கூடுதல் பணியிடங்கள் சேர்க்கப்படும் என அறிவிக்கப்படும்.அதன் படி நடப்பாண்டிலும் குருப் 4 பணியிடங்களில் கூடுதல் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் குறைவாக உள்ளது. எனவே வாரியங்களில் நிரப்பப்பட வேண்டிய பணியிடங்களையும் சேர்த்து கூடுதல் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: Nasal Vaccine: நாசல் கரோனா தடுப்பு மருந்துக்கு ரூ. 800 விலை நிர்ணயம்