சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள 'லால் சலாம்' படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் ஹார்ட் டிஸ்க்கில் இருந்து மாயமாகிவிட்டதாக கூறப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது ஜெயிலர் திரைப்படம். இவரது மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஏற்கனவே நடிகர் தனுஷ் நடித்த '3' படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்.
கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கௌதம் கார்த்திக் நடித்த 'வை ராஜா வை' என்ற படத்தையும், 'சினிமா வீரன்' என்ற ஆவணப்படத்தையும் இயக்கினார். இவர் தற்போது லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் 'லால் சலாம்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இது இந்தியில் வெளியான 'கை போ சே' என்ற படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரஜினி, மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்து இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் ஹார்ட் டிஸ்க்கில் இருந்து மாயமாகிவிட்டதாக கூறப்படுகிறது. மாயமான காட்சிகளை மீட்க வெளிநாட்டில் இருந்து தொழில்நுட்ப வல்லுநர்களை வரவழைத்து மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் பொங்கலுக்கு 'லால் சலாம்' படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து படக்குழுவினரிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கலுக்கு ஏற்கனவே அறிவித்த படி சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான், சுந்தர்.சியின் அரண்மனை-4 படங்கள் வெளியாக உள்ள நிலையில் தற்போது ஜெயம் ரவியும் இந்த போட்டியில் இணைந்துள்ளார்.
ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ஆன்டணி பாக்யராஜ் இயக்கத்தில், நடிகர் ஜெயம் ரவி நடித்து வரும் சைரன் திரைப்படமும் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது.