பாஜக இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்து ஓராண்டு நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, பாஜக மாநில தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, “பாஜக ஆட்சி அமைத்து வரலாற்றில் பிரச்னைகளாக இருந்த பலவற்றை தீர்துள்ளது. குறிப்பாக காஷ்மீர் 370 சட்டம் நீக்கம், முத்தலாக் பிரச்னை, குடியுரிமை சட்டம், அயோத்தி ராமர் கோயில் என பல வரலாற்று பிரச்னைகளை பாஜக சரிசெய்து வருகிறது.
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எல்.முருகன் பிரதமர் மோடி உலகளவில் பலமிக்க தலைவராக திகழ்ந்து வருகிறார். தற்போது கரோனாவை கட்டுப்படுத்துவதில் கூட இந்தியாவை பல வல்லரசு நாடுகள் பாராட்டியுள்ளது. அதே நிலையில், இந்திய பொருளாதாரத்தை கூட சரி செய்ய பாஜக அரசு முயற்சிகள் மேற்கொண்டு சுய பாரதம் என்ற திட்டத்தை பிரதமர் மோடி முன்னிறுத்தியுள்ளார் என்றார்.தொடர்ந்து பேசிய அவர், திமுக சமூக நீதியை குழி தோண்டிப் புதைத்துள்ளனர். அதிமுக போல் திமுக கட்சியை எதிர்த்து பாஜகவும் விரைவில் போராட்டம் நடத்தவுள்ளது. திமுக நிர்வாகிகளின் கருத்துக்கு ஸ்டாலின் மௌனம் காப்பது அதை ஆதரிப்பது போல் உள்ளது என்றார்.
மேலும் அவர், சமீபத்தில் வெளியாகியுள்ள வெப் சீரிஸ் ஒன்றில் இந்து மதத்தை இழிவுபடுத்துவது போல் காட்சி உள்ளது. அது கண்டனத்துக்குரியது. அதுபோல வெப் சீரிஸ்களுக்கு சென்சார் கொண்டுவர பாஜக நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.