கரோனா தொற்று அதிகம் உள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் தவிர, மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இன்று முதல் பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு பேருந்துகள் இயக்கப்படாவிட்டாலும், தலைமைச் செயலகம், உயர் நீதிமன்றம், அரசுத் துறை அலுவலகங்கள், அத்தியாவசியப் பணியாளர்களுக்காக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இதில், தகுந்த இடைவெளி பின்பற்றப்படாமல், கூடுதல் பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்படுவதால், நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஊழியர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
குறிப்பாக, புறநகர்ப் பகுதிகளுக்கு வெகு குறைவான பேருந்துகளே இயக்கப்படுவதால் ஏராளமான ஊழியர்கள் ஒரே பேருந்தில் அருகருகே அமர்ந்து பணிக்கு வர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இன்று காலை கூடுவாஞ்சேரியில் இருந்து சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்தில் அதிக அளவிலான பயணிகள் பயணித்தது சமூக வலை தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
பேருந்துகள் தொடங்கும் இடங்களிலேயே முழு இருக்கைகளும் நிரம்பி விடுவதால், அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள் நின்று கொண்டு பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக பயணி ஒருவர் கூறுகையில், "அனைத்து வழித்தடங்களிலும் குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அந்தப் பேருந்துகளும் தாமதமாக இயக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி பெண்கள் இந்தப் பேருந்துகளில் வர மிகவும் சிரமப்படுகின்றனர். கடந்த வாரத்தில் உயர் நீதிமன்றப் பணியாளர்கள் தலைமைச் செயலகத்தில் இறக்கிவிடப்பட்டதால், அங்கிருந்து நடந்தே அலுவலகத்துக்குச் சென்றனர்"என்றார்.