சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாட்டிலிருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து விமான நிலைய அலுவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், துபாயிலிருந்து சென்னை வந்த விமானத்தில் பயணிகள் இறங்கிச் சென்ற பின்பு விமானத்தைச் சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அந்த விமானம் சென்னையிலிருந்து டெல்லி செல்வதாக இருந்தது. அப்போது, கழிவறையில் சந்தேகத்திற்கிடமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு பார்சல்கள் குறித்து விமான நிலைய சுங்க இலாகா அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதன் பின்னர் அந்த நான்கு பார்சல்களை சுங்க இலாகா அலுவலர்கள் பிரித்துப் பார்த்தபோது அதற்குள் தங்க கட்டிகள் இருப்பதைக் கண்டனர். இதனையடுத்து 2 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 5 கிலோ 600 கிராம் கொண்ட 48 தங்க கட்டிகளைச் சுங்க இலாகா கைப்பற்றி, இதனைக் கடத்தி வந்தவர்கள் யார் என்று விசாரித்து வருகின்றனர்.
விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலர்களின் கெடுபிடி அதிகமாக இருப்பதால் கடத்தல் காரர்கள் உள்நாட்டு முனையமாக செல்லும் விமானங்களைக் குறிவைத்து இம்மாதிரியான கடத்தல்களில் ஈடுபடுகின்றனர் என்று சுங்க இலாகா அலுவலர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: 'நீட் தேர்வு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் காட்டிய சமூக நீதியைப் பின்பற்றுக' - மு.க. ஸ்டாலின் ட்வீட்!