சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி எழுதிய தேர்வு வீரர்கள் "Exam Warriors" புத்தகத்தின் தமிழாக்கத்தை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை வெளியிட அதன் முதல் பிரதியை ஐ.ஐ.டி-சென்னை இயக்குநர் வி.காமகோடி பெற்றுக்கொண்டார்.
முன்னதாக, இந்தியில் பள்ளி குழந்தைகள் தேர்வுக்கு எப்படி பயமின்றி தயார் ஆகலாம் என்பது குறித்த காணொலி ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐ.ஐ.டி-சென்னை இயக்குநர் காமகோடி பேசுகையில், 'இந்த சிறப்பான நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஒவ்வொரு மாணவருக்கும் தேர்வு கால பயம் இருக்கும். பிரதமர் நரேந்திர மோடி எழுதிய இந்தப் புத்தகம் மிகுந்த உதவியாக இருக்கும். மாணவர்களின் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக இருக்கும். ஒரு தேர்வு உங்கள் வாழ்வை, உங்களை முடிவு செய்யாது என்ற வாசகம் உள்ளது.
நான் பயின்ற காலத்தில் ஜே.இ.இ. தேர்வில் வேதியியலில் வெற்றி பெற முடியவில்லை. அதன்பின் சில ஆண்டுகளுக்கு பின் மற்ற தேர்வில் முயன்று இப்போது இந்த இடத்தில் உள்ளேன். இன்று 14 இன்டர் டிசிப்ளினரி படிப்புகள் உள்ளன.
இந்த இரட்டை டிகிரி முறை மூலம் உங்களுக்கு பிடித்த இரண்டு துறை டிகிரி பெற முடியும். பல சுவாரஸ்யமான விஷயங்கள் இந்த புத்தகத்தில் உள்ளது. 16 ஆயிரம் மாணவர்கள் ஐ.ஐ.டி.யின் டேட்டா சயின்ஸ் படிப்புக்கு விண்ணப்பித்தனர். இன்று பல வாய்ப்புகள் நமக்கு உள்ளன என்றார்.
பிறகு நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ரவி பேசுகையில், இங்கு வந்துள்ள உங்கள் அனைவருக்கும் இந்த புத்தகம் வழங்கப்படும். தேர்வு எழுத மட்டுமில்லாமல் உங்கள் வாழ்வில் வளர்ச்சிக்கு உதவும் இந்த புத்தகம். நம் பிரதமர் வித்தியாசமான மனிதர். கடினமான சூழ்நிலைகளை கடந்து வந்துள்ளார்.
சாதாரண மக்களுடன் கிராமங்களில் வாழ்ந்து அனைத்து விதமான சூழ்நிலைகளை கடந்து வந்துள்ளார். அவர் பாதுகாப்பாக வளர்ந்து வரவில்லை. நம் பாரத நாடு பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேறி உள்ளது. இந்தியா யாரால் ஆளப்படுகிறது? என்னாலோ என்னை போல் பதவியில் இருப்பவர்களாலோ இல்லை. உங்களை போன்ற மாணவர்கள் இளைஞர்களால் தான் என்றார்.
நீங்கள் பாறை போன்றவர்கள் உங்களுக்குள் அழகான வைரம் உள்ளது. வெளியில் இருந்து பார்த்தால் கரடுமுரடாக தான் இருக்கும். ஒருமுறை அது வெளிப்பட்டால் அதன் மதிப்பு தெரியும். நீங்கள் சிறந்த மருத்துவர், ஆராய்ச்சியாளர் என வரப்போகிறவர்கள். ஒரு இளம் ஆண் அல்லது பெண் வாழ்வில் முன்னேறாமல் இருப்பது, அவர்களின் இழப்பு மட்டுமல்ல நாட்டின் இழப்பு தன் என கூறியுள்ளார்.
மேலும் தேர்வு மட்டும் இறுதி இல்லை. தேர்வு பயத்தில் பதற்றம், மன அழுத்தம் காரணமாக தற்கொலைக்கு முயல்கிறார்கள். அது மிகவும் கொடுமையானது. தேர்வை மட்டுமல்ல வாழ்க்கையையும் எப்படி எதிர்கொள்வது என்று இந்த புத்தகம் உங்களுக்கு உதவும் என்றார். எளிய டிப்ஸ் இந்த புத்தகம் கொடுக்கிறது. சிலர் இதில் சிலவற்றை பின்பற்றி கூட இருக்கலாம். என் குழந்தைகளுக்கும் மற்றவர்களுக்கும் நான் கூறுவது நீங்கள் தேர்வு தாளை பார்த்ததும் புன்னகை செய்யுங்கள்.
அது கடினமாக இருந்தால் அதிகம் புன்னகை செய்யுங்கள். இது என் யுபிஎஸ்சி.(UPSC) தேர்வில் எனக்கு உதவியது. நான் 600-க்கு 600 மதிப்பெண் எடுத்தேன். அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தேன். உங்களை நீங்கள் நம்ப வேண்டும் அதனால் நம்புங்கள் என்றார்.
பெற்றோர்கள் இதில் முக்கிய பங்காற்றுகின்றனர். மற்ற குழந்தை 99 விழுக்காடு எடுத்துள்ளனர். அதனால் நம் குழந்தை 97 விழுக்காடு எடுத்துள்ளார்கள் என வருத்தப்படுகிறார்கள். இங்குள்ள புத்தகங்கள் போதவில்லை என்றால் உங்கள் வீட்டை தேடி ஒரு வாரத்தில் இந்த புத்தகம் வந்து சேரும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:சே குவேரா மகள் அலெய்டா குவேரா சென்னை வருகை; விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!