சென்னை அடையாறு சாஸ்திரி நகர் பகுதியில் குப்பைத் தொட்டியில் உள்ள குப்பைகளை எடுப்பதற்காகத் தூய்மைப் பணியாளர்கள் நேற்று (ஆகஸ்ட் 23) காலை சென்றனர். அப்போது குப்பைத்தொட்டி அருகே ஒரு கவரில் மண்டை ஓடு, கால், கை எனத் தனித்தனியே எலும்புக் கூடாக இருந்தது.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தூய்மைப் பணியாளர் சாஸ்திரி நகர் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தார். அத்தகவலின்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் அங்கிருந்த எலும்புக் கூடுகளைக் கைப்பற்றி, அதன் ஒரு பகுதியை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை ஆய்வகக் கூடத்திற்கும், மற்றொரு பகுதியை தடயவியல் ஆய்வகத்திற்கும் அனுப்பிவைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கொலை செய்துவிட்டு, எலும்புக்கூட்டை குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றனரா அல்லது கல்லூரி மாணவர்கள் தங்களுடைய மருத்துவப் படிப்புக்கான ஆய்வுக்காக இதனைப் பயன்படுத்தினார்களா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும் கைப்பற்றப்பட்ட எலும்புக்கூடு, 10 ஆண்டிற்கு முன்பு இறந்த உடலின் எலும்புக் கூடாக இருக்கலாம் என்றும், இறந்தவரின் பாலினம் என்ன என்பது பற்றியும் கண்டறிய டிஎன்ஏ பரிசோதனைக்குள்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அருகில் உள்ள சிசிடிவி கேமராவைக் கைப்பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.