சென்னை: தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த தெய்வகண்ணன், சேலம் மாவட்டம்,தடாகப்பட்டியைச் சேர்ந்த தியாகராஜன் ஆகிய இரு வழக்கறிஞர்களும் கொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்கு முடிவுக்கு வரும் வரை இருவரும் எந்த நீதிமன்றங்களிலும், தீர்ப்பாயங்களிலும் ஆஜராக தடை விதித்து பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
இதேபோல, வேலையில் இருந்ததை மறைத்து வழக்கறிஞராகப் பதிவு செய்ததாக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீதர், குற்ற வழக்கை மறைத்ததாக மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வினோத்குமார் ஆகியோருக்கும் பார் கவுன்சில் தடை விதித்துள்ளது. இது தவிர, அம்பத்தூர் நீதிமன்றத்தில் மதுபோதையில் நுழைந்து நீதிமன்ற ஊழியருடன் தகராறில் ஈடுபட்டதுடன், கண்ணாடி ஜன்னல்களை உடைத்ததாகவும் கைது செய்யப்பட்ட ஆவடியைச் சேர்ந்த சுந்தர்ராஜன், அம்பத்தூரைச் சேர்ந்த கணேசன் ஆகியோருக்கும் தொழில் புரிய தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆதிகேசவன் என்பவருக்கு 2022ஆம் ஆண்டு மே மாதம் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்த உயர் நீதிமன்றம், பார் கவுன்சிலில் நிவாரணம் கோரும்படி உத்தரவிட்டதால், அவர் மீதான தடை உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும், இனி நீதிமன்றங்களில் ஆஜராகலாம் எனவும் பார் கவுன்சில் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஆளுநருக்கு பாதுகாப்பில்லை; IPC 124-ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் - டிஜிபிக்கு ஆளுநர் மாளிகை கடிதம்