சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்திலுள்ள சுசீல் ஹரி சர்வதேச பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா கைது செய்யபட்டார். மேலும், மாணவிகளை மூளை சலவை செய்ததாக அவரது பக்தை சுஷ்மிதாவும் கைது செய்யப்பட்டார்.
முன்ஜாமீன் மனு தாக்கல்
இந்த வழக்கில் தேடப்பட்டு வரும், பள்ளி நிர்வாகி ஜானகி சினிவாசன், அவரது மருமகள் பாரதி, பள்ளி ஆசிரியை தீபா வெங்கடராமன் ஆகியோர் முன்ஜாமீன் கோரி தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதில், 2010-2012ஆம் ஆண்டுகளில் படித்த முன்னாள் மாணவிகள் அளித்த புகாரின் பேரில் தங்கள் மீது சிபிசிஐடி காவல் துறையினர் போக்சோ, இந்திய தண்டனை சட்டம் ஆகியவற்றில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், சிவசங்கர் பாபா மீதான வழக்கில் தேவையில்லாமல் தங்களையும் சேர்த்துள்ளதாக தெரிவித்தனர்.
விசாரணை ஒத்திவைப்பு:
இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று (ஜூன் 24) நீதிபதி எம்.தண்டபாணி முன்பு நடந்தது. அப்போது, காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், புகார்தாரரின் வாக்குமூலம் மாஜிஸ்திரேட் முன்பாக நேற்று (ஜூன் 23) பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென கோரிக்கை வைத்தார். மேலும் தீபாவின் முன் ஜாமீன் தவிர மற்ற இருவரது வழக்குகளில் சிபிசிஐடி-யை எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து, மூவரின் முன் ஜாமீன் மனுக்களுக்கும் சிபிசிஐடி காவல் துறையிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு அறிவுறுத்திய நீதிபதி, திருத்த மனுக்களை தாக்கல் செய்ய இரு மனுதாரர்களுக்கும் அறிவுறுத்தி விசாரணையை ஜூலை 1ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.
இதையும் படிங்க: சுஷில் ஹரி பள்ளியின் ஆங்கில ஆசிரியை முன் ஜாமின் கோரி மனு!