காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்கு சொந்தமாக சென்னை - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 141 கிரவுண்ட் நிலம் உள்ளது. இதில் கதவு எண். 768இல் 44.5 கிரவுண்ட் பரப்பில் ’சீதா கிங்ஸ்டன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி’ இயங்கி வந்தது. இதன் குத்தகைக் காலம் முடிவடைந்தால், அந்த இடத்தினை அறநிலையத்துறை மீட்டது.
இந்த நிலத்தில் இதுவரை நடத்தப்பட்டு வந்த சீதா கிங்ஸ்டன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வந்த விவரம், முதலமைச்சர் கவனத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரால் எடுத்துச் செல்லப்பட்டது.
அதனைக் கேள்வியுற்ற முதலமைச்சர், இதுவரை பயின்று வந்த மாணவர்களின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு, இப்பள்ளியை இந்து சமய அறநிலையத்துறை ஏற்று நடத்திட உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக ஆணையர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தலைமையில் பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இந்த இடத்தில் இதுவரை நடத்தப்பட்டு வந்த சீதா கிங்ஸ்டன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியை இந்து சமய அறநிலையத்துறை ஏற்று திருக்கோயில் நிர்வாகம் மூலமாக நடத்திட முடிவு செய்யப்பட்டது.
இப்பள்ளியில் உள்ள கட்டடங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்படவும், தேவைக்கு ஏற்ப புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் எனவும், பள்ளியில் ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் தொடர்ந்து பணி புரிந்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், அப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.