கரோனா தொற்று பரவலைத் தடுக்க உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள், செவிலியர் முதல் வரிசை வீரர்களாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். கரோனா தடுப்பு மருந்துகள் குறித்த ஆராய்ச்சியில் பல்வேறு அறிவியலாளர்கள் உலகம் முழுவதும் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை கரோனாவிற்கு தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டறியப்படாத நிலையில், தான் மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுப்பிய நோயாளிகளில் இரண்டு பேரை தான் குணப்படுத்தியதாகவும் கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள ரத்னா சித்த மருத்துவமனையை நடத்தி வந்த சித்த மருத்துவர் தணிகாசலம் தெரிவித்திருந்தார்.
சமூக ஊடகங்களில் பிரபலமான இவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்தும், உலக சுகாதார நிறுவனம் குறித்தும் தவறான தகவல்களை தன் சமூக வலைதள பக்கங்களில் பரப்பியதாகக் கூறி, இவருக்கு எதிராக இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத் துறை இயக்குநர் முன்னதாக புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரைத் தொடர்ந்து, சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் க்ரைம் காவல் துறையினர், மே ஆறாம் தேதி தகவல் தொழில்நுட்ப சட்டம், அரசுக்கு எதிராக செய்தி வெளியிட்டது, நோய்த் தொற்று தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் இவரைக் கைது செய்து, எழும்பூர் சிறையில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து மே 20ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு பூந்தமல்லி கிளைச் சிறையில் இவர் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தணிகாசலத்தின் ஜாமீன் மனு, ஏழு நாள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய மத்திய குற்றப்பிரிவின் மனு ஆகியவற்றை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், ஆறு நாட்கள் அவரை காவல் துறையினரின் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தணிகாசலம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், இவ்வழக்கை நீதிபதி என். சதீஷ்குமார் இன்று விசாரித்தார். அப்போது, தணிகாசலம் கைதால் எந்த பதற்றமான சூழலோ, சமூகத்தில் தாக்கமோ ஏற்படாதபோது அவரைக் காவலில் எடுத்து விசாரிப்பது அவசியமற்றது என்றும், முறையாக அறிக்கை அனுப்பாமல் கைது செய்ததாகவும் வாதிடப்பட்டது.
ஆனால் தணிகாசலம் விசாரணைக்கு ஒத்துழைக்காததால் காவலில் வைத்து விசாரிப்பதை ரத்து செய்யக்கூடாது என காவல் துறை தரப்பில் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஆறு நாள் காவல் எனும் எழும்பூர் நீதிமன்ற உத்தரவை நான்கு நாட்களாகக் குறைத்து உத்தரவிட்டார். மேலும் காவல் முடிந்து மே 16ஆம் தேதி அவர் ஆஜர்படுத்தும்போதே, அவரது ஜாமீன் மனுவை விசாரித்து தகுதியின் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென எழும்பூர் நீதிமன்றத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முழு ஊரடங்கை திரும்ப பெறவேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள் -எம்.பி விஷ்ணுபிரசாத் கருத்து!