சென்னை: குரூப்-4 பிரிவுக்கு குறைவாக உள்ள வேலை வாய்ப்பிற்கான ரேஷன் கடை பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் ஆகிய பணியிடங்களில் உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கக் கோரியும், 18 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தியும், இன்று வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு உயரம் குறைந்தவர்கள் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்குத் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆதரவு தெரிவித்தார்.
இது குறித்து உயரம் குறைந்தவர்கள் நலச்சங்கத்தின் நிர்வாகிகள் கூறுகையில், "பள்ளி இருக்கை முதல் பேருந்தில் அமர்ந்தோ, நின்று கொண்டு செல்வதும், மின்னாசர சுவிட்ச், தண்ணீர் குழாய் என்று அனைத்தும் விதமான பிரச்சனைகளையும் நாங்கள் சந்தித்து வருகிறோம். 5 ஆண்டுகளுக்கு முன்பாகவே உயரம் குறைந்தோர் மாற்றுத்திறனாளிகள் என்று அறிவிக்கப்பட்டனர்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தின் கீழ் எங்களை தனிப்பிரிவாகவே அங்கீகரித்துள்ளனர். ஆனால், அரசு வழங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான வீடு வழங்கும் திட்டம், இலவச மூன்று சக்கர வண்டி வழங்கும் திட்டம் என பல மாற்றுத்திறனாளிகள் திட்டத்திலும், உயரம் குறைந்தோரைச் சேர்க்கவே இல்லை.
அரசாங்கம் எங்களைப் புறக்கணிக்கிறது என்று பார்த்தால், பொதுமக்களும் எங்களைப் புறக்கணித்து வருகிறார்கள். இது மட்டுமின்றி உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சான்றிதழில் கூட கை, கால் ஊனமுற்றோர் என்று தான் குறிப்பிடுகின்றனர். இதனால் எங்களுக்கான உரிமைகள் கிடைக்காமல் போகின்றன.
தனியார் நிறுவனங்களில் உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பானது குறைவாக இருக்கிறது. இதற்கு அரசு பரிந்துரை என்பது இருக்க வேண்டும். மேலும் எங்களுக்கும் மாத உதவித் தொகைக்கு முன்னுரிமை கொடுத்து 2 மாதங்களுக்குள் மாத உதவித்தொகை வழங்கிடச் சிறப்பு அரசாணை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நாங்கள் முன்வைக்கிறோம்.
குரூப்-4 பிரிவுக்குக் குறைவாக உள்ள வேலை வாய்ப்பிற்கான ரேஷன் கடை பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், ஆகிய பணியிடங்களில் உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கக் கோரியும், 18 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தியும் இந்த போராட்டத்தை நடத்துகிறோம்” என்று கூறினர்
இதையும் படிங்க: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய பிரபல ரவுடி.. யார் இந்த கருக்கா வினோத்?