சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், ‘5ஆம் வகுப்பு, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. 8ஆம் வகுப்பு மாணவர்களின் திறன்களை முழுமையாக அறிவதற்காகத்தான் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. வருகின்ற நடப்பாண்டிலிருந்து 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே புத்தகமாக வழங்குவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ஒரே புத்தகமாக வழங்கப்படும்.
ஐந்தாம் வகுப்பிற்கு முப்பருவ கல்விமுறை திட்டத்தை ரத்து செய்வது குறித்து ஆலோசித்து வருகிறோம். சிறுபான்மை பள்ளிகளில் தமிழாசிரியர்கள் இல்லாததால் தமிழ் பாடத் தேர்வு எழுதுவதிலிருந்து 2023ஆம் ஆண்டு வரை விலக்கு அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் சிறுபான்மைப் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களை நியமனம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
5ஆம் வகுப்பு 8ஆம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டாலும் மாணவர்கள் யாரும் ஃபெயில் செய்யப்பட மாட்டார்கள் என அரசாணையிலேயே தெரிவித்துள்ளோம். அதன்படி மூன்று ஆண்டுகள் மாணவர்கள் ஃபெயில் இல்லாமல் தேர்வு நடைபெறும். இத்திட்டம் நீடிப்பது குறித்து பிற மாநிலங்களில் உள்ள நடைமுறைகளை ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: உள்ளாட்சி உங்களாட்சி 2: 'இந்திய உள்ளாட்சி அமைப்பின் தந்தை'யான வெள்ளைக்கார துரையின் கதை!