சென்னை: மண்ணிவாக்கம் - வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் ஓட்டேரி காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சோதனை மேற்கொண்ட போலீசார், குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய திருவேங்கடம் மற்றும் விமல் ஆகிய இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட குட்காவை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக, ஓட்டேரி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மூட்டைகளில், சில மூட்டைகள் பிரிக்கப்பட்டு குட்கா பொருள்கள் எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து உயர் அதிகாரிகளின் உத்தரவின் பெயரில், போலீசார் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது உளவுப் பிரிவு தலைமைக் காவலராக பணியாற்றக்கூடிய வெங்கடேசன் என்பவர், குட்கா பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியே நிற்கக்கூடிய இரண்டு நபர்களுக்கு கொடுக்கக்கூடிய காட்சிகள் பதிவாகியுள்ளது.
இந்த சிசிடிவி காட்சி ஆதாரத்தின் அடிப்படையில் காவல்துறை உயர் அதிகாரிகள், தலைமைக் காவலர் வெங்கடேசனிடம் விசாரணை மேற்கொண்டபோது “மழை வெள்ள பாதிப்பின்போது பணியாற்றிய நபர்களுக்கு வழங்குவதற்காக குட்கா பொருட்களை எடுத்ததாக” கூறப்படுகிறது.
நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக வைக்கப்பட்டு இருந்த குட்கா மூட்டைகளை வெங்கடேசன் எடுத்து விற்பனை செய்து இருப்பதால், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மாமூல் கேட்டு தொழிலதிபருக்கு மிரட்டல்.. வெடிகுண்டு தவறி விழுந்து வெடித்ததில் 3 பேர் காயம்!