சென்னை: தமிழ்நாட்டில் உள்ள தரமற்ற பொறியியல் கல்லூரிகளில் 2023-24 ஆம் ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான அங்கீகாரம் பறிபோகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும், ‘நான் முதல்வன்’ திட்டத்தினால் கல்லூரியில் போதுமான கட்டமைப்பு, ஆசிரியர்கள் இல்லாமல் வேறு கல்லூரியில் மாணவர்களை படிக்க வைத்து வந்த தில்லாலங்கடி வேலையும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அண்ணா பல்கலைக் கழகத்தின் மாணவர் சேர்க்கை அனுமதியை தரமற்ற கல்லூரிகளுக்கு வழங்குவதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும், சேர்ந்த கல்லூரியில் போதுமான கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்கள் இல்லாததால், வேறு கல்லூரியில் மாணவர்கள் படிக்கின்றனர் என்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும், 2023-24ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அங்கீகாரம் அனுமதி வழங்குவதற்கான விண்ணப்பத்தில், என்ஐஆர்எப் சான்றிதழ், கடந்த 3 ஆண்டுகளுக்கான வருவாய் மற்றும் செலவின கணக்குச் சான்றிதழ், கடந்த 5 ஆண்டுகளில் கல்லூரியில் பாடப்பிரிவு வாரியாக சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையை அண்ணா பல்கலைக் கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரின் ஆவணத்தில் உள்ளது போல் சமர்ப்பிக்க வேண்டும்.
அனைத்து ஆசிரியர்களின் அடையாள அட்டை, பான் கார்டு, ஆதார் கார்டு , உண்மை சான்றிதழ் போன்றவையும் ஆய்வின்போது சமர்ப்பிக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு அகில இந்திய தொழில்நுட்பக்குழுவின் பரிந்துரையின்படி ஊதியம் வழங்க வேண்டும்.
அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுவின் 2023-24ஆம் ஆண்டிற்கான அங்கீகாரம் வழங்குவதற்கான புத்தகத்தில் உள்ள மாற்றங்கள் அமல்படுத்தப்படும் எனக்கூறப்பட்டுள்ளது.
இது போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்கும்போது பெரும்பாலான கல்லூரிகளில் அங்கீகாரம் பெற முடியாத நிலைமை உருவாகும். அங்கீகாரம் அளிப்பதற்கான ஆய்வின்போது, கல்லூரியில் போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருந்தால் அந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களை வேறு கல்லூரிக்கு அதிகாரப்பூர்வமாக மாற்றிவிடவும், கட்டமைப்பு வசதிகள் இல்லாத கல்லூரிக்கு அனுமதி கொடுக்காமல் இருக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக் கழகத்தில் 2022-23ஆம் கல்வியாண்டில் மத்திய அரசின் கல்வி நிறுவனம் 5, மாநில அரசின் கல்லூரிகள் 11, அரசு உதவிபெறும் கல்லூரிகள் 3, தனியார் பொறியியல் கல்லூரியில் இன்ஜினியரிங் 408, ஆர்க்கிடெச்கர் 31, எம்பிஏ 29, எம்சிஏ 2 என 489 கல்லூரிக்கு அண்ணாப் பல்கலைக் கழக மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதியளித்தது. அவற்றில் 80 கல்லூரிகள் தன்னாட்சி அங்கீகாரம் பெற்றுள்ளன.
இந்நிலையில், அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளர் ரவிக்குமார், தமிழ்நாட்டிலுள்ள பொறியியல் கல்லூரிகளில் 2023-24ஆம் ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தனியார் கல்லூரிகள் ஜனவரி 13ஆம் தேதி முதல் மார்ச் 10ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இளங்கலைப் பொறியியல் படிப்புகளில் பிஇ, பிடெக், பிஆர்க், எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்பிஏ, எம்சிஏ ஆகியப் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு கல்லூரியில் உள்ள கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்கள் விபரம் போன்றவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் வேல்ராஜ் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், “அண்ணா பல்கலைக் கழகத்தின் அங்கீகாரம் அளிப்பதற்கான விண்ணப்பங்கள் ஆண்டுதோறும் வழங்கப்படும். அதற்கு விண்ணப்பிக்கும் கல்லூரிகளை ஆய்வு செய்வதற்கு பல்கலைக்கழகத்தில் இருந்து 3 அல்லது 4 பேர் கொண்ட குழுவினர் சென்று ஆய்வு செய்து அறிக்கை அளிப்பார்கள்.
அந்த அறிக்கையின் அடிப்படையில் குறைகள் இருந்தால் நிவர்த்தி செய்யச் சொல்லி கூறுவோம். சரியாக உள்ள கல்லூரிகளுக்கு உடனடியாக அனுமதி அளிப்போம். கல்லூரிகளில் குறைகள் இருந்தாலும் கடைசி நேரத்தில் அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் அங்கீகாரத்தை பெற்று வந்த பின்னர் மாணவர்கள் சேர்க்கைக்கான அங்கீகாரத்தை அண்ணா பல்கலைக் கழகம் வழங்க வேண்டிய நிலைமை இருக்கிறது. சமீபத்தில் ஆய்வு செய்ததில் நிறைய கல்லூரிகளில் அடிப்படை வசதியே இல்லாமல் நடத்திக் கொண்டு வருகின்றனர். நிறையக் கல்லூரிகள் நன்றாகவும் நடத்துகின்றனர்.
எனவே 2023-24-ம் ஆண்டில் அங்கீகாரம் வழங்கும் போது, ஆட்சிமன்றக்குழுவின் முடிவின்படி , எல்லா ஆண்டுகளும் நன்றாக செயல்பட்டு வரும் கல்லூரிகளுக்கு ஆய்வு செய்வதற்கான குழுவை அனுப்பி அவர்களின் நேரத்தை வீணடிக்காமல், பேராசிரியர் நேரத்தையும் சேமிக்கும் வகையில், சில அளவுகோல் அடிப்படையில், கல்லூரியின் வசதிகள், நாக், எம்பிஏ சான்றிதழ்கள் போன்ற அளவீடுகளின்படி நன்றாக செயல்பட்டு வரும் 150 கல்லூரிகளுக்கு நேரடி ஆய்வினை செய்யாமல் அனுமதி அளிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்தக் கல்லூரிக்கு அனுப்பும் பேராசிரியர்களை நன்றாக நடத்தாமல் உள்ள கல்லூரியை ஆய்வு செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருந்தால் அந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களை வேறு கல்லூரிக்கு மாற்றிவிடலாம் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கட்டமைப்பு வசதிகள் இல்லாத கல்லூரிக்கு அனுமதி கொடுக்காமல் இருக்கலாம் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சில கல்லூரியில் சேரும் மாணவர்களை வேறு கல்லூரிக்கு அனுப்பி படிக்க வைக்கின்றனர். ஆனால், அந்தக்கல்லூரியின் பெயரில் அனைத்தும் இருக்கிறது. இது போன்ற செயல்களை கண்டிப்பாக பல்கலைக் கழகம் அனுமதிக்காது. அந்தக் கல்லூரியில் போதுமான கட்டமைப்புகள் இல்லாமலும், கல்லூரியை நிர்வகிக்க போதுமான மாணவர்களும் இல்லாவிட்டால், அந்தக் கல்லூரியை மூடிவிட்டு, தொழிற் பயிற்சி நிறுவனங்களை தொடங்குவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. பொறியியல் படிப்பில் படிப்பில் சேர்வதற்கு மாணவர்கள் வராவிட்டால், வேறு கல்வி நிறுவனத்தை தொடங்கி நடத்தலாம்.
பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்க்கப்பட்டால், முழு நேரமும் மாணவர்கள் வர வேண்டும். மாணவர்களுக்கு கல்லூரியில் படிப்பதற்கான வசதிகளும், 4 ஆண்டுகள் படிப்பினை முடித்தபின்னர் மாணவர்களின் தகுதியும், திறனும் அதிகரிக்கும் வகையில் இருந்தால் தான் அனுமதி கொடுக்க வேண்டும் என நினைக்கிறோம். போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாத கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்குவதில் சில முடிவுகளை எடுக்கவுள்ளோம்.
பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என கூறினால், அதுப் போன்ற கல்லூரிகளில் போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாமலும், பேராசிரியர்கள் இல்லாமலும் இருக்கும் நிலையில், மாணவர்கள் சேர்க்கை ஆண்டு தோறும் குறைந்துக் கொண்டே வரும். மாணவர்கள் சேரவில்லை எனவும், கட்டணங்களை செலுத்தவில்லை என கூறுகின்றனர். சரியாக கற்பிக்காத கல்லூரிகளில் மாணவர்கள் குறையத்தான் செய்வார்கள்.
அது போன்ற கல்லூரிகளில் கட்டமைப்பு வசதிகளை அதிகரித்து, திறமையான ஆசிரியர்களை நியமித்து கல்லூரியை நன்றாக நடத்த வேண்டும். பொறியியல் படிப்பிற்கு வெளிநாட்டு மாணவர்களும் கல்லூரியில் சேர்வதற்கு அழைக்கலாம் என கருதுகிறோம். வெளிநாட்டு மாணவர்களை அழைக்கும் போது கல்லூரியில் போதுமான கட்டமைப்பு, ஆசிரியர்கள் இருந்தால் தான் சேர்க்க முடியும். தரமற்றக் கல்லூரியில் மாணவர்களை சேர்த்தால் தமிழ்நாட்டின் பெயர் பாதிக்கப்படும்.
எனவே சர்வதேச அளவில் இருந்து மாணவர்களை சேர்க்க வேண்டும் என்றால் தரமான கல்லூரிக்கு மட்டும் அங்கீகார அனுமதி வழங்கப்படும். பொறியியல் கல்லூரிகளுக்கு சேர்க்கை அனுமதி வழங்கும் போதே மாணவர்கள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டும் அங்கீகாரம் வழங்கப்படும். ஏற்கனவே குறைவாக மாணவர்கள் உள்ள கல்லூரிகள் வேறுக் கல்லூரியில் மாணவர்களை படிக்க வைக்கின்றனர்.
அதுபோன்ற கல்லூரிகளில் 2,3,4 ஆம் ஆண்டில் படிக்கும் மாணவர்களையும் வேறுக் கல்லூரிக்கு அதிகாரப்பூர்வமாக மாற்றப்படுவார்கள். 60க்கு மேற்பட்டக் கல்லூரிகள் அந்தக் கல்லூரியில் மாணவர்கள் படிக்க வைக்காமல் வேறுக்கல்லூரியில் படிக்க வைக்கின்றனர். போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் 50க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் மாணவர்கள் படிக்க வைத்துக் கொண்டிருக்கின்றனர். அது போன்றக் கல்லூரியால் தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பு சரியாக இல்லை எனவும், அண்ணா பல்கலைக் கழகம் சரியில்லை எனவும் கூறுவார்கள்.
தமிழ்நாட்டில் நான் முதல்வன் திட்டத்திற்கான தரவுகளை சேகரித்து, அதற்கான பயிற்சியை அளிப்பதற்கு கல்லூரிகளுக்கு ஆசிரியர்களை அனுப்பியபோது தான், மாணவர்கள் சேர்த்த கல்லூரிகளில் படிக்க வைக்காமல், வேறு கல்லூரியில் படிக்க வைத்து வருவது தெரிய வந்தது. அதனால் இது போன்றவற்றை சரி செய்வதற்கு அங்கீகாரம் வழங்குவதை நிறுத்துவது தான் ஒரே வழி என முடிவு செய்துள்ளோம். நல்ல கல்லூரிக்கு மட்டுமே மாணவர் சேர்க்கைக்கான அங்கீகார அனுமதியை வழங்க உள்ளோம்.
மேலும், மாணவர்கள் சேர்க்கை குறைவாக இருந்தால், அவர்களை கல்லூரிகள் வேறு கல்லூரிக்கு அனுப்புவதற்குப் பதிலாக பல்கலைக் கழகமே தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலகத்தில் உள்ள தகவலின் படி மாணவர்களை கேட்டறியவும் ஆய்வின் போது திட்டமிட்டுள்ளோம். பொறியியல் கல்லூரிகளில் இளங்கலையில் நல்ல கல்லூரிக்கு மட்டும் அனுமதி அளிக்க உள்ளோம். முதுகலைப் பொறியியல் படிப்பில் கடந்த 10 ஆண்டுகளாக காலதாமதாமாக மாணவர்கள் சேர்க்கை நடத்துவதால், நிறைய மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் தரத்தைவிட கீழே உள்ள என்ஐடி, ஐஐடி போன்ற மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் முதலில் சேர்கின்றனர்.
புதியதாக திறக்கப்பட்டுள்ள என்ஐடி, ஐஐடி போன்ற கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ளது போல் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் இருக்கமாட்டார்கள். அங்கு சென்று சேர்ந்தபின்னர், அண்ணா பல்கலைக் கழகத்திற்கு வராமல் உள்ளனர். இதனால் அண்ணா பல்கலைக் கழகம், அரசுக் கல்லூரிகளுக்கு மட்டும் முதுகலை மாணவர்கள் சேர்க்கையை முன்கூட்டியே நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மாணவர்கள் நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் போதே கலந்தாய்விற்கும் சேர்த்து பெறப்பட்டுள்ளது. இவர்களுக்கு மே மாதத்திற்குள் கலந்தாய்வு நடத்தப்படும். தனியார் கல்லூரிகளுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் அங்கீகாரம் தாமதமாக வருவதால், அதற்கு பின்னர் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். அண்ணா பல்கலைக் கழகத்தின் இணைப்பு பெற்றக்கல்லூரிகளுக்கு அங்கீகாரம் இல்லாமல் நடத்த முடியாது.
அண்ணா பல்கலைக் கழகத்தின் வளாக கல்லூரி, அரசுக் கல்லூரிகளுக்கு மட்டும் முதுகலைப் படிப்பிற்கு மே மாதத்திற்குள் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்படும். இதனால் திறமையான மாணவர்கள் அதிகளவில் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. முதுகலைப் படிப்பினை குறிப்பிட்ட அளவில் தான் மாணவர்கள் படித்து வருகின்றனர். தற்பொழுது புதியதாக துவக்கப்பட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் போதுமான அளவிற்கு வசதிகள் இல்லாவிட்டாலும், சேர்ந்தபின்னர் தொடர்ந்து அங்கேயே படித்து வருகின்றனர்.
எனவே முன்கூட்டியே கலந்தாய்வினை நடத்த உள்ளோம். பொறி்யியல் படிப்பிற்கான பாடப்புத்தகங்களை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் தமிழ் உள்ளிட்ட 14 மாெழிகளில் மாற்றம் செய்து வருகிறது. இதனால் வரும் காலத்தில் பொறியியல் படிப்பிற்கான புத்தகங்கள் தமிழ் மொழியில் படிக்கும் வகையில் இருக்கும்’ என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஐஐடியின் பிஎஸ் படிப்புக்கு கல்வி உதவித்தொகை - கார்கில் நிறுவனம் அறிவிப்பு!