சென்னை: இஸ்லாத்தில் மனைவியரை விவாகரத்து செய்ய பின்பற்றப்பட்ட தலாக் நடைமுறையைப் போல, கணவரை விவாகரத்து செய்ய மனைவியருக்கு குலா என்ற நடைமுறை, ஷரியத் சட்டத்தில் உள்ளது. இந்நிலையில் முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் கீழ் தன்னை விவாகரத்து செய்து, மனைவி பெற்ற குலா சான்றிதழை ரத்து செய்யக் கோரி கணவர் ஒருவரின் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன், தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் ஷரியத் கவுன்சில் என்பது தனியார் அமைப்பு. பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லும் நீதிமன்றங்கள் அல்ல எனவும், அந்த அமைப்புகள் விவாகரத்து வழங்கி சான்றிதழ் வழங்க முடியாது எனக் கூறி, ஷரியத் கவுன்சில் மனைவிக்கு வழங்கிய குலா சான்றிதழை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும் குலா சான்றிதழ்கள் வழங்க ஷரியத் கவுன்சில் போன்ற அமைப்புகளுக்கு உயர் நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, முஸ்லிம் பெண்கள் விவாகரத்து செய்யும் உரிமையை குடும்ப நல நீதிமன்றத்தை நாடி பெற வேண்டும் எனவும், ஷரியத் கவுன்சில் போன்ற அமைப்பின் மூலம் பெற முடியாது எனத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் இரு தரப்பினரும் தங்கள் பிரச்சனைக்குத் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழுவையோ அல்லது குடும்ப நல நீதிமன்றத்தையோ நாடி தீர்வு காணும் படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அமைச்சர் பொன்முடி மீது வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை - சென்னை உயர்நீதிமன்றம்