சென்னை: அதிதீவிர குற்றவாளிகளின் நடவடிக்கையைக் கண்காணிப்பதற்கும், சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்களைக் கண்டறிந்து கைது செய்யவும் தமிழ்நாடு காவல் துறையில் அதிதீவிர குற்றத்தடுப்புப் பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டது.
இந்தப் பிரிவானது நேரடியாகச் சென்னையில் காவல் ஆணையர் கட்டுப்பாட்டின்கீழ் இயங்க உள்ளது. இந்தப் பிரிவைச் சென்னை காவல் துறை வடக்கு, தெற்கு எனப் பிரித்துள்ளனர்.
இரண்டு உதவி ஆணையர்கள் தலைமையில் 54 பேர் கொண்ட காவலர்கள் இந்தப் பிரிவில் பணியாற்ற உள்ளனர்.
இந்த நிலையில் இரண்டாகப் பிரிக்கப்பட்ட இந்தப் பிரிவுகளுக்கான காவல் அலுவலர்களை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவில் தெற்கு பகுதிக்குக் காத்திருப்போர் பட்டியலிலிருந்த காவல் ஆய்வாளர்களான குணசேகரன் மற்றும் பிரபுவும், வடக்குப் பகுதிக்கு ஸ்ரீதர் மற்றும் பார்த்திபன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகளின் நகர்வுகள் கூர்ந்து கவனிக்கப்படுகிறது - எச்சரிக்கும் சங்கர் ஜிவால்
அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்களைத் தடுக்கும் வகையில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், கொலை மற்றும் கொலை முயற்சி குற்றங்களில் ஈடுபடுபவர்கள், திருட்டு, செயின் பறிப்பு, சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள்,
மேலும், போதைப் பொருள்கள் கடத்துபவர்கள், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு மிரட்டிப் பணம் பறிப்பவர்கள், நில அபகரிப்பு, ஆபாச வீடியோ தயாரிப்பு, மணல் கடத்தல், உணவுப் பொருள்கள் கடத்தல், போக்சோ மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் ஆகியோரை தீவிரமாக கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: விதவிதமான முறையில் மோசடி: சைபர் கிரைம் காவல் துறையினர் விழிப்புணர்வு வீடியோ வெளியீடு