சென்னையில் நடக்கும் பிரபல சினிமா விளம்பர நிகழ்ச்சிகளில் முன்வந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் போல் காட்டிக் கொள்பவர், சக்திவேல். எந்த ஒரு சினிமா தொடர்பான நிகழ்ச்சி என்றாலும்; அங்கு வந்து பிரபலங்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு சமூக வலைதளத்தில் பதிவிட்டு தன்னை சினிமாவில் பிரபலமான ஈவன்ட் ஏஜெண்டாக காட்டிக்கொண்டு வலம் வந்துள்ளார்.
கே.ஜி.எஃப் ஹீரோ யாஷ், போனி கபூர், அமீர்கான் என பல்வேறு பாலிவுட் பிரபலங்களுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை பயன்படுத்தி வெளி மாநிலங்களிலும் சினிமா பிரபலம் போன்ற பிம்பத்தை ஏற்படுத்தியுள்ளார். பிரபலமான இசை நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளில் 50 வி.ஐ.பி பாஸ்கள் எடுத்துக் கொண்டு சினிமாவில் பிரபலமானவர்களுக்கு கொடுத்து, நட்புடன் பழகுவதை வழக்கமாகக் கொண்டுள்ளவர் என்பதும் தெரியவந்துள்ளது.
தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி பிரபலங்களான விக்ரம், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி உள்ளிட்ட பிரபல ஹீரோக்கள் உடனும் ஐஸ்வர்யா ராய், தமன்னா, கங்கனா ரணாவத், பூஜா ஹெக்டே, சாய் பல்லவி, ராய் லட்சுமி என பல முன்னணி நடிகைகளுடனும், ஏ.ஆர் ரஹ்மான், அனிருத் போன்ற இசைப் பிரபலங்களுடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டு சமூக வலைதளத்தில் நிகழ்ச்சியில் இருப்பது போல் பதிவிட்டதால் பல பெண்களும் நம்பி, இவருடன் நட்பாகப் பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த மாடல் அழகி ஒருவர், 2019ஆம் ஆண்டு ஃபேஷன் ஷோ ஒன்றிற்காக சென்னைக்கு வந்துள்ளார். அப்போது சினிமா ஏஜென்ட் சக்திவேல் மற்றும் அவரது நண்பர்கள் மூலமாக பழக்கம் கிடைத்ததாகவும், தொடர்ந்து இன்ஸ்டாகிராம் மூலம் சக்திவேலும் அவர்களது நண்பர்களும் நட்பாகப் பழகியதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 2022ஆம் ஆண்டு பிரபல சினிமா விருது நிகழ்ச்சியான 'சைமா விருது' நிகழ்ச்சி பெங்களூருவில் நட்சத்திர ஓட்டலில் நடைபெற இருப்பதாகவும், அதில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக தான் இருப்பதாகவும் சக்திவேல் கூறியுள்ளார். பெங்களூருவிற்கு விருது நிகழ்ச்சி நடக்கும்போது வி.ஐ.பி பாஸ் மூலம் தன்னை கலந்துகொள்ள வைத்ததாகவும் மாடல் அழகி தெரிவித்தார்.
அப்போது பேசிய சக்திவேல் தனக்கு தமிழ் சினிமாவில் பல சினிமா பிரபலங்களை தெரியும் எனவும்; சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி ஆசை வார்த்தை காட்டியதாகவும் மாடல் அழகி கூறினார். இதற்காக புகைப்படங்கள் எடுக்க வேண்டும் எனக்கூறி, சென்னையில் பிரபல நட்சத்திர ஓட்டலில் நீச்சல் உடையில் தன்னைப் புகைப்படங்கள் எடுத்ததாகவும் மாடல் அழகி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சினிமா வாய்ப்பு வாங்கித் தராமல் தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ய ஆரம்பித்ததாகவும், தொழிலதிபர்கள் மற்றும் சினிமா பிரபலங்களுடன் பாலியல் ரீதியாக உறவு கொள்வதற்கு செல்லுமாறும் அவ்வாறு சென்றால் இரண்டு லட்சம் ரூபாயில் இருந்து அதிகளவு பணம் கிடைக்கும் எனக் கூறி மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு தான் கேட்கும்படி செய்யவில்லை என்றால், நீச்சல் உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியதாகவும் மாடல் அழகி வேதனை தெரிவித்தார். தொடர்ந்து பாலியல் ரீதியாக மிரட்டி வந்த சினிமா ஏஜென்ட் சக்திவேல் குறித்து பெங்களூரு காவல்துறையில் மாடல் அழகி புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் பெங்களூரு போலீசார் விசாரணை மேற்கொண்டு சென்னையில் சினிமா ஏஜென்ட் சக்திவேலை பெங்களூரு போலீசார் கைது செய்தனர். காவல் துறையின் இந்த நடவடிக்கை தெரிந்தவுடன் சினிமா சக்திவேல் புகார் அளித்த பெண்ணிடம் புகாரை வாபஸ் பெறுமாறும், தன் வாழ்க்கை பாதிக்கப்படும் என கெஞ்சி அழுதுள்ளார். இந்த ஆடியோவையும் பாதிக்கப்பட்ட பெண் வெளியிட்டுள்ளார்.
மேலும் இதன் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானதையடுத்து சினிமா ஏஜென்ட் சக்திவேல் மீது கைது நடவடிக்கை மேற்கொண்டு பெங்களூரு போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் செல்வாக்கான ஒருவர் கொடுத்த அழுத்தத்தின் மூலம் இந்த வழக்கிலிருந்து ஜாமீனில் வெளிவந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. பெங்களூரு போலீசார் சினிமா ஏஜென்ட் சக்திவேலுக்கு எதிராக ஆதாரங்களை திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: "இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அஇஅதிமுக மக்களுக்காகவே இயங்கும்": ஈபிஎஸ் ட்வீட்