சென்னை: கடந்த ஆண்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கு, தனியார் விடுதியில் தங்கிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.
சென்னை தியாகராயநகரில் உள்ள தனியார் விடுதியில் தனிமைப்படுத்துதலிலிருந்த ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர் வெற்றிச் செல்வன், அதே விடுதியில் தனிமைப்படுத்துதலிலிருந்த பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து பெண் மருத்துவர், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் டீன் தேரணி ராஜனிடம் புகார் அளித்தார், அதன் அடிப்படையில் விசாகா கமிட்டி விசாரணை நடத்தியது. விசாரணையில் பாலியல் பலாத்காரம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இது தொடர்பாக தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சென்னை அல்லிக்குளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி முகமது பஃருக், மருத்துவர் வெற்றிச் செல்வன் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகச் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி உள்ளதாகக் கூறி தீர்ப்பு வழங்கினார்.
மருத்துவர் வெற்றிச் செல்வனுக்கு பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அபராதத் தொகையில் 20 ஆயிரம் ரூபாயைப் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு இழப்பீடாக வழங்கக்கோரி நீதிபதி ஆணையிட்டார்.
இதையும் படிங்க: ஆதார் இணைப்புக்கு அவகாசம் நீட்டிப்பு.. இலவச மின்சாரம் ரத்தா? - அமைச்சர் விளக்கம்