முதலமைச்சர் பரப்புரையின்போது பணியில் ஈடுபட்டிருந்த எஸ்பி ஒருவர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தமிழ்நாடு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது புகார் அளித்தார். இது தொடர்பாக திமுக எம்பி கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் சமூக வலைதளங்களில் அவர்களது கண்டனத்தை பதிவு செய்தனர். பாலியல் புகாரில் சிக்கிய தமிழ்நாடு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை முதலமைச்சர் காப்பாற்ற முயல்வது ஏன் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வாயிலாக கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, புகார் மீது நடவடிக்கை எடுக்க கூடுதல் தலைமைச் செயலர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் ஆறு பேர் அடங்கிய விசாகா கமிட்டியை தமிழ்நாடு அரசு அமைத்தது. மேலும், சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை கட்டாய காத்திருப்புக்கு பணியிட மாற்றம் செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இந்நிலையில் ஐபிஎஸ் அலுவலர்கள் சங்கத்தின் தமிழ்நாட்டு பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், பெண் அலுவலர் ஒருவர் மூத்த ஐபிஎஸ் அலுவலர் மீது கொடுத்த பாலியல் புகாரை முக்கியமாக பார்ப்பதாகவும், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுக்கு ஐபிஎஸ் அலுவலர்கள் சங்கம் ஒற்றுமையாக நின்று எதிர்த்துக் குரல் கொடுக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழ்நாடு அரசு விசாகா கமிட்டி அமைக்கப்பட்டது, சம்பந்தப்பட்ட மூத்த அலுவலரான ராஜேஷ்தாஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டதையும் குறிப்பிட்டுள்ளனர். விசாக கமிட்டி இந்த விவகாரத்தில் சுதந்திரமான, நேர்மையான, விரைவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஐபிஎஸ் அலுவலர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: