சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் சோழம்பேடு சாலையில் அன்வர் பாஷா என்பவர் இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். இன்று (நவம்பர் 8) ஞாயிற்றுக்கிழமை என்பதால் ,10க்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்காக வாங்கி கடையில் வைத்திருந்தார். இந்நிலையில், வழக்கம் போல் இன்று கடைக்கு சென்ற அன்வர் பாஷா, கடையின் பூட்டு உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக உள்ளே சென்று பார்கையில், விற்பனைக்காக வைத்திருந்த ஆடுகளிலிருந்து 7 வெள்ளாடுகளை அடையாளம் தெரியாத நபர்கள், திருடிச் சென்றது தெரியவந்தது. உடனடியாக, இது குறித்து திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.