சென்னையைச் சேர்ந்த தம்பதியான அஞ்சலி மற்றும் பிரபாகரன் ஆகியோர் தனியார் தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பான காமெடி நிகழ்ச்சியில் பங்கு பெற்று பிரபலமானவர்கள். இந்நிலையில், இவர்கள் இருவரும் இணைந்து தங்களது யூடியூப் சேனலில் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில் அஞ்சலியின் தந்தை கண்ணன் என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நீலங்கரையில் உள்ள செல்போன் விற்பனை கடையில் தனியார் வங்கியின் (idfc bank) மூலம் மாதத் தவணை முறையில் செல்போன் ஒன்றை வாங்கியுள்ளார். அதற்கு சாட்சியாக தனது மகள் அஞ்சலியின் செல் நம்பரை மட்டும் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு கண்ணன் இறந்துள்ளார். அதன் பிறகு 2021ஆம் ஆண்டு கண்ணனின் மனைவியும் இறந்துள்ளார். இதனையடுத்து கடந்த வாரம் அஞ்சலிக்கு போன் செய்த நபர் ஒருவர் தனியார் வங்கியில் (IDFC bank) இருந்து பேசுவதாகவும், உங்களின் தந்தை கண்ணன் உங்களது செல்போன் நம்பரை சாட்சியமாக வழங்கி இருப்பதால் தாங்கள் தொடர்பு கொண்டதாகக் கூறி, அவரது தந்தை மாதத் தவணையில் செல்போன் வாங்கிவிட்டு அசலும் கட்டவில்லை வட்டியும் கட்டவில்லை என்றும், ஆகையால் அஞ்சலியைப் பணத்தை செலுத்துமாறு தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அஞ்சலி தனது நிலைமையை எடுத்துக் கூறியுள்ளார். குறிப்பாக 2018 ஆம் ஆண்டு முதல் தனது தாய், தந்தையை பிரிந்து வாழ்வதாகவும், 2019 ஆம் ஆண்டு திருமணமாகி கணவருடன் வசித்து வருவதாகவும், எனவே தனது தந்தை வாங்கிய செல்போன் தொடர்பாக எந்த தகவலும் தனக்கு தெரியாது எனவும், குறிப்பாக தனது தந்தை, தாய் இரண்டு பேரும் இறந்துவிட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் அஞ்சலி கூறியதை சிறிதும் கேட்காமல் தொடர்ந்து தனியார் வங்கியிலிருந்து போன் செய்து பணத்தை செலுத்துமாறு வற்புறுத்தி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் அஞ்சலி சட்டரீதியாக நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள் என தெரிவித்ததையடுத்து, சில நாட்களுக்கு பிறகு உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராமமூர்த்தி என்று ஒரு நபர் போன் செய்து மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.
இதனையடுத்து காவல் உதவி ஆய்வாளர் சுப்பிரமணி என்பவர் பேசுவதாகக் கூறி ஒரு நபர் சட்ட நடவடிக்கை வேண்டாம் எனவும் சமரசமாக போக வேண்டும் எனவும் வழக்கறிஞரைத் தொடர்பு கொண்டு இந்த பிரச்சினை பணம் கட்டி முடிக்க வேண்டும் எனவும் அஞ்சலியிடம் கூறியுள்ளார். மேலும், இந்த உரையாடல்கள் அனைத்தும் போனில் பதிவு செய்து வைத்துள்ளனர்.
இந்நிலையில், இதனால் பதட்டம் அடைந்த அஞ்சலி மற்றும் அவரது கணவர் பிரபாகரன் இருவரும் தங்களது வழக்கறிஞரை நாடியுள்ளனர். அவரிடம் ஆலோசனை நடத்திய பின்னர் இது யாரோ தங்களிடம் பணம் பறிக்க மோசடியில் ஈடுபடுவதாக சந்தேகம் அடைந்து இது தொடர்பாக தாம்பரம் காவல் ஆணையர் அலுவலக எல்லைக்குட்பட்ட தாழம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகார் தொடர்பாக விசாரிப்பதாக காவல் நிலையத்தில் கூறி இருவரையும் அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், இதுவரை அந்தப் புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சின்னத்திரை தம்பதியினர் குற்றம் சாட்டி உள்ளனர்.
மேலும், காவல் நிலையத்தில் புகார் அளித்த பின்னரும் தொடர்ந்து அடையாளம் தெரியாத போன் நம்பரில் இருந்து தங்களுக்கு மிரட்டல் வந்து கொண்டிருப்பதாகவும், இதுபோன்று தனியார் வங்கி செயல்படுவது மிகவும் வருத்தம் அளிப்பதாகவும் தங்களது வீடியோவில் குறிப்பிட்டுள்ளனர்.
இவர்கள் பதிவிட்ட வீடியோவின் கீழ் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வரும் பொது மக்கள் இதே போன்று பல்வேறு தனியார் வங்கிகளின் கலெக்சன் ஏஜென்ட் மற்றும் வங்கிகளின் நேரடி மிரட்டலுக்கு ஆளானது தொடர்பாகமனக்குமுறல்களை பதிவு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தென்காசியில் 12 பவுன் நகை திருடிய நபரை 2 மணி நேரத்தில் பிடித்த போலீசார்