சென்னை: சின்னத்திரை நடிகர் அர்ணவ் அவரது காதல் மனைவி கர்ப்பினியான சின்னத்திரை நடிகை திவ்யாவை அடித்து துன்புறுத்தியாக தெரிகிறது. இது குறித்து அவர் அளித்த புகாரில் போருர் அனைத்து மகளிர் காவல் துறையினர் அர்ணவ் மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த புகார் சம்பந்தமாக விசாரணைக்கு ஆஜராகுமாறு பலமுறை காவல் துறையினர் தெரிவித்தும் அர்ணவ் விசாரணைக்கு ஆஜராகாததால் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என காவல் துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர். காவல் துறையினர் அனுப்பிய சம்மனை அர்ணவ் பெற்றுக் கொண்டதாகவும் குறிப்பாக பதிவு தபால் மற்றும் செல்போனிலும் அவருக்கு அனுப்பப்பட்ட சம்மனை அவர் பெற்றுக் கொண்ட நிலையில் இன்று காலை விசாரணைக்கு ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை அவருக்கு பதிலாக அவரது வழக்கறிஞர்கள் மாங்காட்டில் உள்ள போரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று அனைத்து மகளிர் ஆய்வாளரிடம் அர்ணவிற்கு கண்ணில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அதன் காரணமாக அவர் விசாரணைக்கு ஆஜராவதில் கால அவகாசம் வேண்டும் எனவும் வரும் 18ஆம் தேதி அவர் விசாரணைக்கு ஆஜர் ஆவார் என விளக்க கடிதம் கொடுத்தனர்.
அதனை காவல் துறையினர் ஏற்றுக்கொள்ள மறுத்ததால் வழக்கறிஞர்கள் அங்கிருந்து கிளம்பி பதிவு தபால் மூலம் அனுப்புவதற்குச் சென்றனர். அர்ணவ் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் நேற்று விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றும் விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் கேட்கும் நாள்களுக்கு இடையில் அவர் முன் ஜாமீன் எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் அருண் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவதற்கான சான்றுகள் ஏதும் தராததால் சந்தேகமடைந்த காவல் துறையினர் அவரது செல்போனினை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என வந்தது இதையடுத்து அவர் படப்பிடிப்பு தளத்தில் இருப்பதாக வந்த தகவலையடுத்து போரூர் காவல் துறையினர், விரைந்து சென்ற தனிப்படை காவல் துறையினர் பூந்தமல்லி அடுத்த நேமம் பகுதியில் தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பில் இருந்த அர்ணவை அதிரடியாக கைது செய்தனர்.
காவல் துறையினரின் வருவதை சற்றும் எதிர்பாராமல் இருந்த அர்ணவ் அதிர்ச்சியில் உறைந்து போனார். இதையடுத்து அர்ணவை மாங்காடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிரமாக விசாரித்து வந்தனர்.
விசாரணைக்கு ஆஜராகாமல் நாடகமாகமாடி விட்டு படப்பிடிப்பில் இருந்த சின்னத்திரை நடிகர் அர்ணவை படப்பிடிப்பு தளத்தில் வைத்தே காவல் துறையினர் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கைது செய்யப்பட்ட அர்ணவை பூந்தமல்லியில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டு பின்னர் அம்பத்தூரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: ரயில் நிலையத்தில் மாணவி கொலை செய்யப்பட்ட விவகாரம்; கொலையாளி சதீஷ் பிடிபட்டது எப்படி?